IND vs SL Asia Cup 2023 Final: இந்தியாவுக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்யுமா இலங்கை? டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
இலங்கை வானிலை ஆய்வு மையம் இன்று போட்டி நடக்கும் கொழும்பில் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் போட்டி தடையில்லாமல் நடைபெறுவது கேள்விக்கு ஆளாகியுள்ளது.
IND vs SL Asia Cup 2023 Final: ஆசியக்கோப்பைத் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி நடப்புச் சாம்பியன் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் இறுதிப் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி விழ்த்தி மீண்டும் கோப்பையை தனதாக்கிட முழு முயற்சியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். அதேபோல் இந்திய அணியைப் பொறுத்தவரையில் இம்முறை கோப்பையை கைப்பற்றினால் 8வது முறையாக கோப்பையை கைப்பற்றும் அணி என்ற பெருமையைப் பெறும்.
டாஸ் வென்ற இலங்கை
இந்நிலையில் இந்தியாவும் இலங்கையும் இன்று அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி இலங்கையின் கொழும்பில் உள்ள மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இலங்கை வானிலை ஆய்வு மையம் இன்று போட்டி நடக்கும் கொழும்பில் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் போட்டி தடையில்லாமல் நடைபெறுவது கேள்விக்கு ஆளாகியுள்ளது.
போட்டி தொடங்கிய பின்னர் மழை விட்டு விட்டு பெய்யும் பட்சத்தில் போட்டி தடங்களுக்கு மத்தியில் நடைபெறும். இதுவரை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முழு போட்டியும் மழையால் தடைபட்டால், ரிசர்வ் - டே குறித்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. போட்டி 17ஆம் தேதி நடத்தி முடிக்கப்படவில்லை என்றால் 18ஆம் தேதி நடத்தப்படும். 18ஆம் தேதியும் போட்டி நடத்தமுடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில் கோப்பை இரு அணிகளுக்கும் பிரித்து வழங்கப்படுமா என்பது குறித்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்தான் முடிவு செய்யும்.
குறுக்கே வந்த மழை
இந்த தொடர் தொடங்கியது முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் தொடர் நடக்கும் இரண்டு மைதானங்கள் அமைந்துள்ள இடங்களில் மழை பெய்துதான் வருகிறது. இது குறித்து முன்னரே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்துக்கூரியுள்ளது. ஆனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வேறு வழியில்லாமல் இலங்கையில் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்தினாலும், பெரும்பாலான போட்டிகள் இலங்கையில்தான் நடைபெற்றது. குறிப்பாக இந்திய அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்ததால், இந்தியாவை சமாதானப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பல கட்டங்களாக முயற்சி செய்தது. ஆனால், இந்தியா தனது முடிவில் உறுதியாக இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் தெரிவித்துவிட்டது. இதன் காரணமாகவே தொடர் சற்று கால தாமதமாக தொடங்கப்பட்டது. இதுவும் மழைக்காலத்தில் இலங்கையில் தொடரை நடத்த முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால், உலகக்கோப்பைத் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் புது நம்பிக்கையுடன் விளையாடும் என எதிர்பார்க்கலாம். இந்திய அணியைப் பொறுத்தவரையில், சுழற்பந்து வீச்சாளரும் ஆல்-ரவுண்டருமான அக்ஷர் பட்டேலுக்கு கையில் காயம் ஏற்படவே தற்போது அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சளாரான தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இன்று நடைபெறும் போட்டி முக்கியமானதாக உள்ளது.