Kohli Test Captaincy Record: டெஸ்ட் கேப்டன்சியில் ஸ்மித், வில்லியம்சன், ரூட்... முன்னோடி விராட்கோலி சம்பவங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் தற்போது ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்தத் தொடருக்கு மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆகவே இந்த முறை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைபைப்பில் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். அவருடைய டெஸ்ட் கேப்டன்சி ரெக்கார்டு மிகவும் சிறப்பானதாகவே அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூன்று பேருடன் ஒப்பிடும் போது விராட் கோலியின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. அத்துடன் அவருடைய வெற்றி சதவிகிதமும் மிகவும் அதிகமானதாக அமைந்துள்ளது.
கோலி,ஸ்மித்,வில்லியம்சன்,ரூட் டெஸ்ட் கேப்டன் செயல்பாடுகள்:
வீரர் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | டிரா | வெற்றி % |
விராட் கோலி | 66 | 39 | 16 | 11 | 59.09 |
கேன் வில்லியம்சன் | 38 | 22 | 8 | 8 | 57.89 |
ஸ்டீவ் ஸ்மித் | 35 | 19 | 10 | 6 | 54.28 |
ஜோ ரூட் | 58 | 27 | 23 | 8 | 46.55 |
கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க தொடரிலும் விராட் கோலி சிறப்பான ஃபார்மில் இருந்தார். 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1 சதம் மற்றும் அரைசதத்துடன் 286 ரன்கள் அடித்தார். அதன்பின்பு நடைபெற்ற ஒருநாள் தொடரில் 6 போட்டிகளில் 3 சதம் மற்றும் 1 அரைசதத்துடன் 558 ரன்கள் விளாசினார். அதைபோல் இம்முறையும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியனஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து தொடர், நியூசிலாந்து தொடர் ஆகியவற்றில் விராட் கோலியின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. மேலும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. இதன்காரணமாக டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலிலும் அவர் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பாக அவரை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். இவை அனைத்திற்கும் தகுந்த பதிலடியாக அவருடைய பேட்டிங் அமையும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க: தோனியின் ஆரம்பம்.. 17 ஆண்டுகளுக்கு முன் இந்திய கிரிக்கெட்டில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய நாள்..!