IND vs SA 3rd ODI: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தால் வரலாறுதான்..! தட்டித்தூக்குமா தென்னாப்பிரிக்கா?
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வி அடையும். ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு மகத்தான சாதனையை சமன் செய்ய உள்ளது. அதாவது எதிரணியை அதிக முறை ஒயிட்வாஷ் செய்த அணிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி முதலிடத்திற்கு முன்னேறும். இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா அணி ஒருநாள் தொடர்களில் 19 முறை எதிரணியை ஒயிட் வாஷ் செய்து இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் அணி 20 முறை ஒயிட்வாஷ் செய்து முதலிடத்தில் உள்ளது.
ஒருநாள் தொடர்களில் அதிக முறை ஒயிட்வாஷ் செய்த அணிகள் :
அணிகள் | தொடர்கள் |
பாகிஸ்தான் | 20 |
தென்னாப்பிரிக்கா | 19 |
நியூசிலாந்து | 16 |
ஆஸ்திரேலியா | 16 |
வெஸ்ட் இண்டீஸ் | 16 |
கேப்டவுன் மைதானத்தை பொறுத்தவரை இந்திய அணி கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த மைதானத்தில் இதுவரை தென்னாப்பிரிக்கா அணி விளையாடியுள்ள 37 ஒருநாள் போட்டிகளில் 31 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே இந்த மைதானத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க போராட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மேலும் படிக்க: யு-19 உலகக்கோப்பை: சத்தமில்லாமல் கெத்துக் காட்டும் இந்தியா.. நடப்புச் சாம்பியனுடன் காலிறுதி!