IND vs PAK Asia Cup 2025 Final: பாகிஸ்தானுக்கு மீண்டும் பல்பு.. ஆசிய கோப்பையை வென்றது இந்தியா - திலக மகன் திலக்!
Asia Cup Final 2025: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.

IND vs PAK Asia Cup 2025 Final: ஆசிய கோப்பை இறுதிப்போட்டி இன்று துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இந்த இறுதிப்போட்டியில் மோதியதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியது.
147 ரன்கள் டார்கெட்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அதிரடியாக தொடங்கினாலும் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல் சீராக பந்துவீச குல்தீப் யாதவ் மொத்த பாகிஸ்தானுக்கும் நெருக்கடி தந்தார். பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்தியாவிற்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
20 ரன்களுக்குள் 3 விக்கெட்:
இதையடுத்து, இந்திய அணி 147 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற கனவுடன் களமிறங்கியது. இந்த தொடர் முழுவதும் அசத்தி வந்த அபிஷேக் சர்மாவும் - சுப்மன்கில்லும் ஆட்டத்தை தொடங்கினார். பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த 2 போட்டியிலும் அசத்திய அபிஷேக் சர்மா இந்த போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அபிஷேக் சர்மா 5 ரன்களில் அவுட்டானார். இதனால், இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலே இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் அவுட்டானார். சற்று நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன்கில்லும் 12 ரன்களுக்கு அவுட்டாக 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது. அப்போது, இந்திய அணிக்காக திலக் வர்மா - சாம்சன் ஜோடி சேர்ந்தனர்.
காப்பாற்றிய திலக் - சாம்சன்:
மிகவும் நெருக்கடியான சூழலில் இந்திய அணிக்காக ஜோடி சேர்ந்த திலக் வர்மா - சாம்சன் நிதானமாக ஆடினர். ஷாகின் அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரஃப், முகமது நவாஸ், ஹரிஷ் ராஃப். அப்ரார் அகமது பந்துவீச்சை மிகவும் நிதானமாக ஆடி ஓரிரு ரன்களாக எடுத்தனர். திலக் வர்மா - சாம்சன் இருவரும் பொறுப்புடன் ஆடினர்.

ஓரிரு ரன்களாகவும், தேவைப்படும் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினர். இதனால், அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல ஏறியது. இந்த ஜோடி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அதிரடிக்கு மாற முயன்ற சாம்சன் அவுட்டானார். அவர் 21 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் அவுட்டானார். இதனால், இந்திய அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
ரன் அவுட்டை மிஸ் செய்த பாகிஸ்தான்:
இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 40 பந்துகளில் 67 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் திலக் வர்மா- ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். பின்வரிசையில் ரிங்கு சிங், அக்ஷர் படேல் இருவர் மட்டுமே இருந்ததால் இவர்கள் இருவரும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மைதானம் சுழலுக்கு ஒத்துழைத்ததால் அப்ரார் அகமது, சையம் அயூப், முகமது நவாஸ் சுழலில் நெருக்கடி அளித்தனர். அப்போது, சையம் பந்தில் கிடைத்த அற்புதமான ரன் அவுட் வாய்ப்பை பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் தவறவிட்டார். இதனால், பொறுப்புடன் ஆடிய திலக் வர்மாவிற்கு வாழ்வு கிடைத்தது.
திலக் அரைசதம்:
கடைசி 6 ஓவர்களில் 64 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்குத் தேவைப்பட்டது. அப்போது, இந்த ஜோடி அதிரடிக்கு மாறியது. ஹாரிஷ் ராஃப் வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்ஸரை துபே - திலக் வர்மா ஜோடி விளாச இந்தியா 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. இதனால், கடைசி 5 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டது. அப்ரார் அகமது வீசிய கடைசி ஓவரில் இந்திய அணி ஒரு சிக்ஸர் உள்பட 11 ரன்களை எடுத்தது. மேலும், அபாரமாக ஆடிய திலக் வர்மாவும் 41 பந்துகளில் அரைசதம் விளாசினார். இருவரும் அதிரடிக்கு மாறினர்.
கடைசி 3 ஓவர் திக் திக்:
கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரை வீசிய அப்ரிடி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால், கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரில் முதல் 5 பந்துகளை ஹாரிஷ் ராஃப் கட்டுக்கோப்புடன் வீசிய நிலையில், ராஃப் வீசிய கடைசி பந்து புல் டாசாக அமைய ஷிவம் துபே சிக்ஸருக்கு அனுப்பினார்.

இதனால், 12 பந்துகளுக்கு 17 ரன்கள் என்று நிலைமை மாறியது. 19வது ஓவரை அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஃபஹீம் வீசினார். முதல் பந்தை இரண்டு முறை வீச வந்து அவர் காலில் பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆட்டத்தில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், அந்த ஓவரின் முதல் 3 பந்தில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அப்போது 4வது பந்தில் பவுண்டரி விளாசினார். 5வது பந்தை அவர் டாட் பாலாக வீச, கடைசி பந்தை அவர் சிக்ஸருக்கு விளாச முயற்சிக்க லைனில் நின்ற ஷாகின் அப்ரிடி அதை கேட்ச் பிடித்தார்.
இதனால், கடைசி 6 பந்துகளில் 10 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு தேவைப்பட்டது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா சாம்பியன்:
இதனால், கடைசி 6 பந்துகளில் 10 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு தேவைப்பட்டது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரை ஹாரிஷ் ராஃப் வீசினார். முதல் ஓவரை டாட் பாலாக வீசினார் . இரண்டாவது பந்தை திலக் வர்மா சிக்ஸராக விளாச, கடைசி 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே இந்தியாவிற்கு தேவைப்பட்டது. அந்த பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விளாச இந்திய அணி 2 பந்துகள் மீதம் வைத்து 150 ரன்களை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய திலக் வர்மா 53 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.




















