IND vs NZ: அடி தூள்.. மிரட்டிய மிட்செல்.. பிழிந்தெடுத்த ப்லிப்ஸ்..! 338 ரன்களை எட்டுமா இந்தியா?
மிட்செல், ப்லிப்ஸ் சதம் விளாசியதையடுத்து, இந்திய அணிக்கு 338 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் வெற்றி பெற்றாக வேண்டிய ஆர்வத்தில் இரு அணிகளும் களமிறங்கின.
ஆரம்பமே அதிர்ச்சி:
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்காக கான்வே - நிகோல்ஸ் ஆட்டத்தை தொடங்கினர். நிகோல்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப்சிங் பந்தில் போல்டாக, கான்வே 5 ரன்னில் ஹர்ஷித் ராணா பந்தில் அவுட்டாக அவர்கள் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர்.
அடுத்து யங் - மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் இருவரும் பந்துவீச்சில் நெருக்கடி தர இவர்கள் இருவரும் நிதானமாக ஆடினர். மிட்செல் சிறப்பாக ஆட மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த வில் யங் 30 ரன்களில் அவுட்டானார். அவர் 41 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் அவுட்டானார்.
மிட்செல் - கிளென் ப்லிப்ஸ் சதம்:
இதையடுத்து, டேரில் மிட்செல் - கிளென் பிலிப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சரிவில் இருந்த நியூசிலாந்து அணியை மீட்டது. மிட்செல் பொறுப்புடன் ஆட ப்லிப்ஸ் நிதானமாக தொடங்கி, அதிரடியாக ஆடத்தொடங்கினார். அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் விளாசினர். இதனால், தடுமாறிய நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.
சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்தினார். டேரில் மிட்செல் சதம் விளாசிய பிறகு சில நிமிடங்களில் கிளென் பிலிப்ஸ் சதம் விளாசினார். களத்தில் நங்கூரமிட்ட இந்த ஜோடியை அர்ஷ்தீப்சிங் பிரித்தார். அவரது பந்தில் 88 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 106 ரன்களுடன் அவுட்டானார்.
338 ரன்கள் இலக்கு:
அவர் அவுட்டான அடுத்த ஓவரிலே சதம் விளாசி அபாரமாக ஆடிக்கொண்டிருந்த டேரில் மிட்செல்லும் சதம் விளாசினார். 131 பந்துகளில் 15 பவுண்டரி 3 சிக்ஸருடன் 137 ரன்கள் விளாசி அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஃபோக்ஸ், கிரிஸ்டியன் கிளார்க் ஓரளவு ரன்களை எடுக்க ப்ராஸ்வெல் 28 ரன்களை எடுக்க 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 338 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணிக்காக அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது சிராஜ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மைதானம் சேசிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. இந்தியா அணியின் சுப்மன்கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற முடியும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















