INDvsIRE 3rd T20: தோல்வி அறியா பும்ராவின் இளம்படை..! ஒயிட்வாஷ் ஆகுமா அயர்லாந்து..? இன்று கடைசி டி20 மோதல்..!
இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையேயான டி-20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையேயான டி-20 தொடரின், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது.
அயர்லாந்து சுற்றுப்பயணம்:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்த, பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி, டி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து, காயத்திலிருந்து மீண்டு 11 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ள, பும்ரா தலைமையில் இளம் இந்திய அணி தற்போது அயர்லாந்து சென்றுள்ளது.
அங்கு 3 போட்டிகள் கொண்டடி-20 தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் போட்டியின் பாதியில் மழை குறுக்கிட்டதால், இந்திய அணி டக்வர்த் லிவீஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 2-0 என கைப்பற்றியது.
3வது டி-20 போட்டி:
இந்நிலையில் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று நடைபெற உள்ளது. டப்ளின் பகுதியில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற பும்ரா தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.
அதேநேரம், இந்த போட்டியில் வென்று ஒயிட்வாஷ் செய்யப்படுவதை தவிர்த்து, உள்ளூர் மண்ணில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என அயர்லாந்து அணி முனைப்பு காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி நிலவரம்:
இந்திய அணியின் பும்ரா தலைமையிலான பந்துவீச்சு இளம் வீரர்களுடன் வலுவாகவே காணப்படுகிறது. ரவி பிஷ்னோய் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளனர். டாப் ஆர்டருக்கு நேர்த்தியாக பந்துவீசினாலும், மிடில் மற்றும் டெயில் எண்டர்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் இருந்த சிரமத்தை, கடைசி போட்டியில் நேர்த்தியாக கையாண்டனர். இந்த போட்டியிலும் அது தொடரும் என எதிர்பார்க்கலாம்.
பேட்டிங்கில் கெய்க்வாட், ஜெய்ஷ்வால், ரிங்கு சிங் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணிக்கு தேவையான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அதேநேரம், தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் சொதப்பிய இளம் வீரர் திலக் வர்மா, இன்றைய போட்டியின் மூலம் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
உத்தேச அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்
உத்தேச இந்தியா அணி : ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரின்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னோய்