IND vs ENG: இது டெஸ்டா? டி20யா? ஒரே தொடரில் 7 ஆயிரம் ரன்கள்.. மலை போல ரன்களை குவித்த இந்தியா - இங்கிலாந்து!
IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன்களும், இந்தியா வெற்றி பெற 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தொடர் முழுவதும் சாதனைகள் மேல் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியலை கீழே காணலாம்.
1. இந்த தொடரில் இதுவரை இரு அணிகளும் சேர்ந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளனர். தற்போது வரை 7 ஆயிரத்து 159 ரன்களை எடுத்துள்ளனர். 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்ட இரண்டாவது டெஸ்ட் இதுவாகும். இதற்கு முன்பு 1993ம் ஆண்டு ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய 6 டெஸ்ட் போட்டிகளில் 7 ஆயிரத்து 221 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம் ஆகும்.
2. நடப்பு இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரில் இதுவரை 21 சதங்கள் விளாசப்பட்டுள்ளது. அதில் இந்திய தரப்பில் 12 சதங்களும், இங்கிலாந்து தரப்பில் 9 சதங்களும் விளாசப்பட்டுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் விளாசப்பட்ட அதிக சதம் என்ற சாதனையை இந்த தொடர் படைத்துள்ளது. இதற்கு முன்பு 1955ம் ஆண்டு ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய தொடரில் 21 சதங்கள் விளாசப்பட்டிருந்தது. அந்த சாதனை தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் நேற்று தனது 10வது டெஸ்ட் சதத்தை விளாசினார். தனது 50வது இன்னிங்சில் அவர் விளாசும் 10வது சதம் இதுவாகும். அதாவது, கடந்த 70 ஆண்டு காலத்தில் 50 இன்னிங்சிலே 10 சதம் விளாசிய வீரர் முதல் வீரர் ஆவார்.
4. நேற்ற 39வது சதத்தை விளாசிய ஜோ ரூட் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் விளாசும் 13வது சதம் இதுவாகும். ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை கவாஸ்கருடன் அவர் சமன் செய்து கொண்டுள்ளார். கவாஸ்கர் இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 13 சதங்கள் விளாசியுள்ளார். சர்வதேச அளவில் பிராட் மேன் இங்கிலாந்திற்கு எதிராக 19 சதங்களை விளாசியதே அதிகபட்சம் ஆகும்.
5. இந்த தொடர் முழுவதும் இந்திய அணி கேப்டன் சுப்மன்கில் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினார். இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த ஆசிய வீரர் என்ற சாதனையை சுப்மன்கில் படைத்துள்ளார். சுப்மன்கில் மட்டும் 754 ரன்கள் விளாசியுள்ளார்.
6. எட்ஜ்பாஸ்டன் நகரில் நடந்த போட்டியில் இந்திய அணி மட்டும் 1000 ரன்களுக்கு மேல் குவித்தது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 1000 ரன்களை ஒரே டெஸ்டில் எடுத்தது அதுவே முதன்முறை ஆகும்.
இந்த தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே மைதானம் இருந்ததால், 7 ஆயிரம் ரன்களை இரு அணிகளும் சேர்ந்து குவித்துள்ளனர்.




















