IND Vs ENG 5th Test: தர்மசாலாவில் 100வது டெஸ்ட்.. வெறிகொண்டு காத்திருக்கும் அஸ்வின், பேர்ஸ்டோவ்..!
தர்மசாலா டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்ரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் 100வது டெஸ்டில் களம் இறங்குகிறார்கள்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இப்போது இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வருகின்ற மார்ச் 7ம் தேதி (வியாழக்கிழமை) முதல் தர்மஷாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவுக்கு மிகவும் முக்கியமானது. இருவரும் இந்த போட்டியின் மூலம் தங்களது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கின்றனர்.
The Greatest match winner of Indian Test history.
— Muzamil Riasat (@MuzamilRiasat7) February 25, 2024
- Ravichandran Ashwin 🐐#INDvENG pic.twitter.com/sv0LPDLPLJ
100வது டெஸ்ட் போட்டி:
தர்மசாலா டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்ரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் 100வது டெஸ்டில் களம் இறங்குகிறார்கள். அஸ்வினும், பேர்ஸ்டோவும் இதுவரை தங்களது அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
இரு வீரர்களும் இதுவரை தொடரின் கடைசி நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதுவரை இங்கிலாந்து அணி வீரர் பேர்ஸ்டோவ் சிறப்பாக எதுவும் செய்யவில்லை. இந்த தொடரில் பேர்ஸ்டோ மொத்தமாகவே இதுவரை 170 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் மறுபுறம் அஸ்வின் இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து தொடரில் இரு வீரர்களும் எப்படி..?
அஸ்வின்: இந்தியா-இங்கிலாந்து தொடரின் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 30.41 சராசரியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பேர்ஸ்டோவ்: இந்தியாவுக்கு எதிராக மோசமான பார்முடன் திணறி வரும் ஜானி பேர்ஸ்டோவ் 4 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 21.25 சராசரியில் 170 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதுவரை இவர்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை:
அஸ்வின்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கடந்த 2011ம் ஆண்டு நவம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அஸ்வின் இதுவரை இந்திய அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 187 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 23.91 சராசரியில் 507 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர, 140 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர், 26.47 சராசரியில் 5 சதங்கள், 14 அரைசதங்களுடன் 3309 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 124 ரன்கள் ஆகும்.
பேர்ஸ்டோவ்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேட்ஸ்டோவ் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36.42 சராசரியில் 5974 ரன்கள் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் இவர் 12 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடித்துள்ளார். மே 2012 இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பேர்ஸ்டோ தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.