IND Vs ENG 4th Test Day 2: முடிவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டம்; தடுமாற்றத்தில் இந்தியா; ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து
IND Vs ENG 4th Test Day 2: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் துருவ் ஜுரேலும் குல்தீப் யாதவும் உள்ளனர். இந்திய அணி 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகின்றது. இதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி நான்காவது போட்டி தொடங்கியது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
ராஞ்சியில் உள்ள மைதானத்தில் தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியது. இந்திய அணியின் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஜாக் கார்லி, பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் ஆகியோரது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் சேர்த்திருந்தது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 106 ரன்கள் சேர்த்த நிலையில் களத்தில் இருந்தார். இவருக்கு ஆதரவாக ஒல்லி ராபின்சன் களத்தில் இருந்தார்.
இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி விக்கெட்டினை கைப்பற்றுவார்கள் என நினைத்த போது, இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. 353 ரன்கள் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதல் சரிவே காணப்பட்டது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மட்டும் அரைசதம் கடந்து பொறுமையாக விளையாடி வந்தார். ஆனால், இறுதியில், அவரும் தனது விக்கெட்டினை 73 ரன்களுக்கு தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இங்கிலாந்து அணி சார்பில் அறிமுக வீரர் இந்திய அணியின் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். குறிப்பாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜித் படிதார் மற்றும் ஜடேஜா ஆகியோரது விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தினார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 73 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் துருவ் ஜுரேல் 30 ரன்களுடனும் குல்தீப் யாதவ் 17 ரன்களும் சேர்த்த நிலையில் களத்தில் உள்ளனர்.