(Source: ECI/ABP News/ABP Majha)
Rajat Patidar: மூன்று போட்டிகள்.. சொதப்பல் ஆட்டம்.. என்னவாகும் ரஜத் படிதாரின் எதிர்காலம்?
இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 63 ரன்கள் மட்டுமே எடுத்த ரஜத் படிதாரை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
ரஜத் படிதாரின் சொதப்பல் ஆட்டம்:
முன்னதாக இந்த தொடரில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் ரஜத் படிதர். அந்த வகையில் தான் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாகவே 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இச்சூழலில் ரசிகர்கள் பலரும் இவரை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 72 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார்.
ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த இவர் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் முறையில் வெளியேறினார். இவ்வாறு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஜத் படிதர் நான்காவது டெஸ்ட் போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அந்த போட்டியிலும் சொதப்பலாகவே செயல்பட்டார். அந்தவகையில் நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 17 ரன்களை மட்டுமே எடுத்த ரஜத் படிதர் 2-வது இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் இவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த டெஸ்ட் தொடரின் மூலம் அறிமுகமான சர்பராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோர் தங்களை நிரூபித்த நிலையில் இவர் சொதப்பல் ஆட்டம் ஆடுவது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது.
மேலும் படிக்க: Gujarat Giants vs Mumbai Indians: பந்து வீச்சில் மிரட்டிய அமெலியா கெர்...மும்பை அணிக்கு 127 ரன்கள் இலக்கு!
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!