Yashasvi Jaiswal Century: நான் அடிச்சா அதிரடி! மூன்றாவது டெஸ்ட்டில் சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தல்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசியுள்ளார். இவர் 122 பந்துகளை எதிர்கொண்டு 9வது பவுண்டரி விளாசும் போது சதத்தை எட்டினார். 122 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இவர் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு யெஷெஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகின்றார். முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் ஒரு அரைசதத்துடன் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து, 95 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு இன்னிங்ஸிலும் அதாவது இரட்டைச் சதத்தினை சேர்த்து, 226 ரன்களும் சேர்த்து அணிக்கு பக்கபலமாக விளங்கினார்.
மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்களும் சேர்த்த நிலையில் ரிடையர் - ஹர்ட் முறையில் களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதுவரை இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 425 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை தற்போது தன் வசம் வைத்துள்ளார் ஜெய்ஸ்வால்.
ரிடையர் - ஹர்ட் ஆன ஜெய்ஸ்வால்
சதம் விளாசிய பின்னர் ஜெய்ஸ்வாலுக்கு ஏற்பட்ட முதுகு வலிப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு களத்திலேயே முதலில் முதல் உதவி செய்யப்பட்டது. அதன் பின்னர் இரண்டு ஓவர்கள் களத்தில் இருந்த ஜெய்ஸ்வாலால் மேற்கொண்டு வலியைத் தாங்கிக் கொண்டு விளையாட முடியவில்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறினார். இவர் 133 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவருக்கு அணி வீரர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டி வரவேற்றனர்.