Rohit Sharma On Ashwin: தீவிர பயிற்சியில் அஷ்வின்; நாளை களமிறங்க வாய்ப்பா? ரோகித் சொன்ன சூசக பதில் இதுதான்..!
Rohit Sharma On Ashwin: நாளை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தினை எட்டியவுடன் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களும் ஒவ்வொரு மணியையும் திக் திக் மனநிலையிலேயே கழித்து வருகின்றனர் எனக் கூறும் அளவிற்கு எதிர்பார்ப்பு எகிறி வருகின்றது. இந்நிலையில் இன்று அதாவது நவம்பர் 18ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியது தற்போது முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. நாளை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஷ்வின் இருக்கிறாரா இல்லையா என செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா இது குறித்து அணியில் நாளை முடிவு செய்வோம் என பதில் அளித்தார். நடப்பு உலகக் கோப்பையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஷ்வின், இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறக்கப்பட்டார். அதன் பின்னர் இந்தியா விளையாடிய 9 போட்டிகளிலும் அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் விளையாடுவதில் ஏதேனும் அழுத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு, ‘நாங்கள் இதுபோன்ற ஒரு போட்டியில் விளையாடும் போதெல்லாம், கடந்த காலங்களில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதை விட தற்போதைய வீரர்களின் ஆட்ட நுணுக்கம் முக்கியமானது. எங்களிடம் 2011 முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கு பெற்ற இரண்டு வீரர்கள் உள்ளனர். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதுவரை விளையாடிய விதத்தையே தொடர விரும்புகிறோம் எனவும் பதில் அளித்தார். இதனால் அஸ்வின் களமிறங்க எந்தளவிற்கு வாய்ப்பு உள்ளது என்பதை நாளை ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தே முடிவு செய்வார்கள் எனலாம்.