Ashwin - Jadeja: இந்தியாவின் சுழல் அஸ்திரம்..! எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அஸ்வின் - ஜடேஜா..!
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஜோடி 2 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 31 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் இந்திய அணியை சொந்த மண்ணில் டெஸ்ட் வடிவத்தில் வீழ்த்துவது எந்த அணிக்கும் எளிதான காரியம் அல்ல. ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஜோடியை சுழற்பந்து வீச்சில் எதிர்கொள்ள எதிரணி தடுமாறுவதே இதற்கு மிகப்பெரிய காரணம். தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்த ஜோடி 2 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 31 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
அஸ்வின் - ஜடேஜா:
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி தற்போது உலக கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் முதல் இடத்தை எட்டியுள்ளது. இருவரும் இணைந்து இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 462 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இரண்டு பந்துவீச்சாளர்களும் ஒரு போட்டிக்கு சராசரியாக 10.27 விக்கெட்டுகளைப் எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் மற்றும் மறைந்த ஷேன் வார்னே ஜோடி உள்ளனர்.
எந்தவொரு அணியாக இருந்தாலும் இத்தகைய பந்துவீச்சு சறுக்கலை தரும். இந்த காரணத்திற்காகதான் இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு எதிராக விளையாட கடுமையாக பயிற்சி மேற்கொண்டனர். இந்த இரண்டு பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்கள் மீது தொடர்ந்து அழுத்தத்தை தருவதோடு, முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகின்றனர்.
இந்திய மண்ணில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சு சராசரி:
இந்திய மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சு சாதனையை பார்த்தால் மிகவும் ஆச்சரியத்தை தரும். அஸ்வின் இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20.85 சராசரியுடன் மொத்தம் 326 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், ஒரு இன்னிங்ஸில் மட்டும் 25 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும், ஒரு போட்டியில் 6 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையும் செய்துள்ளார்.
அதேபோல், ரவீந்திர ஜடேஜா 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19.81 சராசரியில் 189 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதுவரை, இந்தியாவில் 10 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். மேலும், 2 முறை 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் வருகின்ற மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டோட் , மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன்
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ் , ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்