IND vs AUS 2nd Test: நாதன் லயன் சுழலில் சறுக்கும் இந்தியா..! 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டெல்லியில் நடைபெறும் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து இருந்தது. 242 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடங்கியது.
ரோகித் - ராகுல் நிதான ஆட்டம்:
இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது முதலே, மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதன் காரணமாக, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான இடைவெளியில் பவுண்டரிகளையும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 46 ரன்களை சேர்த்த போது. 17 ரன்கள் சேர்த்து இருந்த ராகுல், எல்பிடபள்யூ முறையில் நாதன் லயன் பந்துவீச்சில் அவுட்டானார்.
புஜாரா டக்-அவுட்:
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா, 32 ரன்கள் எடுத்து இருந்தபோது நாதன் லயன் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார். இதனிடையே, தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய புஜாரா, 7 பந்துகளை எதிர்கொண்டும் ரன் ஏதும் எடுக்காமல் நாதன் லயன் பந்து வீச்சில் எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். இதன் மூலம், 100வது டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆன இரண்டாவது வீரர் எனும் மோசமான பட்டியலில் புஜாரா இடம்பெற்றுள்ளார்.
ஸ்ரேயாஸ் அய்யர் விக்கெட்:
முதுகுவலி காரணமாக முதல் போட்டியில் விளையாடாத , ஸ்ரேயாஸ் அய்யர் இந்த போட்டியில் களமிறங்கினார். ஆனால். வந்த வேகத்திலேயே வெறும் 4 ரன்களுக்கு, நாதன் லயன் பந்துவீச்சில் ஹேண்ட்ஸ்கோம்பிடம் கேட் கொடுத்து அய்யர் அவுட்டானார்.
பொறுப்பான ஆட்டம்:
இதனால் 66 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர், அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் இந்திய அணி, 39.3 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எட்டியது. தொடர்ந்து ஜடேஜா 26 ரன்கள் எடுத்து இருந்தபோது, டாட் மார்ஃபி பந்து வீச்சில் எல்பிடபள்யு முறையில் அவுட்டானார். கோலி - ஜடேஜா ஜோடி 59 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 47 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணிக்காக பொறுப்புடன் ஆடிய விராட்கோலி 46 ரன்களில் அவுட்டானார். பின்னர், பரத்தும் 6 ரன்களில் அவுட்டானார்.
ஆஸ்திரேலியா ஆல்-அவுட்:
முன்னதாக நேற்று தொடங்கிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி சார்பில் அதிகபடமாக, கவாஜா 81 ரன்களையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களையும், கம்மின்ஸ் 33 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.