Ind vs Aus: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி.. பாண்ட்யா தலைமையில் வெற்றி கிட்டுமா?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெற உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெற உள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 01.30 மணியளவில் தொடங்க இருக்கிறது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஹாட் ஸ்டார் செயலியிலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. அதைதொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல் இந்திய அணியும் டெஸ்ட் தொடரில் கிடைத்த வெற்றியை தொடரும் நோக்கில் களமிறங்க உள்ளது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி நிலவரம்:
தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு பாண்ட்யா கேப்டனாக செயல்பட உள்ளார். அதோடு, சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க உள்ளனர் இதனிடையே, காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இதன் காரணமாக நடுகள வீரர்களான கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தொடர, கே.எல்.ராகுல் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி நிலவரம்:
ஆஸ்திரேலிய அணியும் அனைத்து வகையிலும் இந்தியாவுக்கு நிகரான பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் தனிப்பட்ட காரணங்களால் ஒரு நாள் தொடரில் இருந்து விலகி விட்டார். இதையடுத்து அஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்டீவன் சுமித் கவனிக்க உள்ளார். ஆல்-ரவுண்டர்கள் கிளன் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணியுடன் இணைந்திருப்பது அவர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. டேவிட் வார்னரும் ரன்வேட்டைக்கு ஆயத்தமாக உள்ளார். பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ் நம்பிக்கை அளிக்கின்றனர்.
சாதனை படைப்பாரா கோலி?
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நட்சத்திர வீரர் விராட் கோலி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்சில் 3 சதங்கள் விளாசியுள்ள கோலி ஒட்டுமொத்தத்தில் 46 சதங்கள் அடித்துள்ளார். இதையடுத்து, ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் சச்சினை சமன் செய்வதற்கு இன்னும் 3 சதங்களே தேவை. அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவரான சச்சினின் மற்றொரு சாதனையை (9 சதம்) சமன் செய்வதற்கு கோலிக்கு இன்னும் ஒரு சதம் தேவையாகும். இப்படி சிகரத்தை நோக்கி பயணிக்கும் விராட் கோலி இந்த தொடரில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் நூறு ரன்களை எட்டினாலும் அது புதிய மைல்கல்லாக இருக்கும்.
நேருக்கு நேர்:
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 143 முறை நேருக்கு நேர்மோதியுள்ளன. இதில் 80-ல் ஆஸ்திரேலியாவும், 53-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா நேரடி ஒரு நாள் தொடரில் ஆடுவது இது 11-வது முறையாகும். முந்தைய 10 தொடர்களில் இரு அணிகளும் தலா 5 வீதம் கைப்பற்றி உள்ளன. இன்றைய போட்டி நடைபெற உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய அணி இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 ஆட்டங்களில் ஆடி அதில் 3-ல் தோற்றதும் அடங்கும். இந்திய அணி இந்த ஆண்டில் உள்ளூரில் ஆடிய 6 ஒரு நாள் போட்டிகளிலும் வாகை சூடியுள்ளது. இதே போல் ஆஸ்திரேலியா தனது கடைசி 6 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இவர்களில் யாருடைய வெற்றிப்பயணம் முடிவுக்கு வரப்போகிறது என்பதை பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்திய உத்தேச அணி:
சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது ரஜத் படிதார், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது சாஹல் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், முகமது ஷமி அல்லது உம்ரான் மாலிக்
ஆஸ்திரேலிய உத்தேச அணி:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுசக்னே, மிட்செல் மார்ஷ் அல்லது மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது நாதன் எலிஸ்