Virat Kohli: சொந்த மைதானத்தில் ஜொலிப்பாரா விராட் கோலி? இதுவரை பெர்ஃபாமென்ஸ் எப்படி?
Virat Kohli: உலகக் கோப்பை 2023 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட்கோலி தன்னுடைய சொந்த மைதானத்தில் களமிறங்க இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் ஆடிய இந்திய அணி விராட்கோலி – கே.எல்.ராகுலின் அபார பேட்டிங்கால் அபார வெற்றி பெற்றது.
சொந்த மைதானத்தில் களமிறங்கும் கோலி:
இந்த நிலையில், இந்திய அணி தன்னுடைய அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி நாட்டின் தலைநகரான டெல்லியில் நடக்கிறது. டெல்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி விராட்கோலிக்கு தனித்துவமானது ஆகும். ஏனென்றால், அது அவரது சொந்த மைதானம் ஆகும்.
விராட்கோலியின் சொந்த மைதானமான டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் அவரின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 282 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள விராட்கோலி டெல்லி மைதானத்தில் இதுவரை 7 ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளார்.
இதுவரை எப்படி?
டெல்லி மைதானத்தில் விராட்கோலி தான் ஆடியுள்ள 7 ஒருநாள் போட்டிகளில் 6 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். அதில் மொத்தம் 222 ரன்களை எடுத்துள்ளார், அதில் ஒரு சதம் மற்றும் 1 அரைசதம் அடங்கும் அருண் ஜெட்லி மைதானத்தில் விராட்கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது ஆகும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த விராட்கோலி மிக நேர்த்தியான இன்னிங்ஸ் ஆடினார். அவரது அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி வெற்றி பெற்றது. இலக்கை நோக்கி நெருங்கிய நேரத்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி 85 ரன்களுக்கு அவுட்டானார்.
ஜொலிப்பாரா கோலி?
மிக நெருக்கடியான நேரத்தில் தன்னுடைய அனுபவம் வாய்ந்த மற்றும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட்கோலியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். அதேபோல, சிறப்பான ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் விராட்கோலி ஆடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கடந்த போட்டியில் சதத்தை தவறவிட்ட விராட்கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசுவாரா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
போட்டி நடக்கும் அருண் ஜெட்லி மைதானம் பேட்டிங்கிற்கு ஏதுவான மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி இலங்கைக்கு எதிராக 429 ரன்களை விளாசியதே அதிகபட்ச ரன் ஆகும். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி இந்த மைதானத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.
அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரை 27 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் முதலில் பேட் செய்த அணி 13 முறையும், 2வது பேட் செய்த அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் 428 ரன்கள் விளாசி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த தென்னாப்பிரிக்க அணிதான், இந்த மைதானத்தில் 99 ரன்கள் எடுத்து குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்துள்ளது.
மேலும் படிக்க: Virat Kohli : “அருண்ஜெட்லி மைதான பெவிலியனுக்கு என் பெயரா? அது சங்கடம்” - விராட் கோலி என்ன சொல்றார் பாருங்க!
மேலும் படிக்க: Kusal Mendis Century: அதிரடியாக 6 சிக்ஸ்...65 பந்துகளில் சதம் விளாசிய இலங்கை வீரர் குசல் மெண்டிஸ்!