ஒரே ஒரு முறை எங்க நாட்டுக்கு வாங்க! இந்திய வீரர்களுக்கு அப்ரிடியின் அன்புக்கட்டளை!
இந்திய அணியை பாகிஸ்தான் நாட்டிற்கு வரவேற்கிறேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025:
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதைதொடர்ந்து அடுத்து ஆண்டு ஐசிசி சார்பில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில், முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி போட்டி 50 ஒருநாள் வடிவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி மீண்டும், சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்ல இந்திய அணி விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பேசியுள்ளார்.
விராட் கோலிக்கு இருக்கும் மாஸ்:
அவர் பேசுகையில், "இந்திய அணியை பாகிஸ்தான் நாட்டிற்கு வரவேற்கிறேன். 2005ஆம் ஆண்டு இந்தியாவிற்கு நாங்கள் பயணித்த போது, அவ்வளவு மரியாதையை பெற்றிருக்கிறோம். என்னை பொறுத்தவரை அரசியலை விளையாட்டுடன் இணைக்க தேவையில்லை.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பயணிப்பதும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதையும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும். விராட் கோலி மட்டும் ஒருமுறை பாகிஸ்தான் வந்தால், அவர் இந்தியாவில் கிடைத்த அன்பையே மறந்துவிடுவார். பாகிஸ்தானில் விராட் கோலிக்கு மிகப்பெரிய மாஸ் இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விராட் கோலியை கொண்டாடி வருகின்றனர்.
எனக்கும் விராட் கோலி மிகவும் பிடித்த வீரர். என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்திருக்க கூடாது. பாகிஸ்தான் மைதானங்களில் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கே நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம் என்று" தெரிவித்துள்ளார்.