ICC World Cup 2023: உலகக்கோப்பையில் மாட்டுக்கறிக்கு அனுமதி இல்லையா? விவரம் உள்ளே
ICC World Cup 2023: இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, தென் ஆப்ரிக்கா, ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்கின்றன.
ICC World Cup 2023: உலகக்கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் 6 நாட்கள்தான் உள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, தென் ஆப்ரிக்கா, ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தங்களை மிகவும் மும்முரமாக தயார்படுத்தி வருகின்றன.
மாட்டுக்கறிக்கு மறுப்பு:
இந்நிலையில் தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் , தொடரில் கலந்து கொள்ளும் மற்ற 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் இம்முறை இந்தியா மட்டும் உலகக்கோப்பையை வெல்வதால், 10 நாட்டு வீரர்களுக்கும் வழங்கப்படும் உணவில் மாட்டுக்கறிக்கு இடம் அளிக்கப்படாமல் மறுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு தேவையான புரதச் சத்தினை மாட்டுக்கறி மூலம் பெறுகிறார்கள் என்பது எங்களுக்கு தெரிந்திருந்தாலும் மாட்டுக்கறி எங்கள் மதம் சம்பந்தப்பட்ட விஷயம் எனவும், மாட்டுக்கறிக்கு பதிலாக வீரர்கள் தங்களின் புரதத்தேவைக்கு ஆட்டுக்கறி, கோழிக்கறி மற்றும் மீன் ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேட்டாலும் தரப்படாது:
வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மெனு மட்டும் இல்லாமல் தங்களின் விருப்ப உணவுகள் எதுவாக இருந்தாலும் அதனைத் தெரிவித்தால் மிகச் சிறந்த சமையல் கலைஞர்களைக் கொண்டு உணவு தயாரித்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிறப்பு உணவிலும் மாட்டுக்கறி சமைத்து தரப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் வீரர்கள் தாங்கள் பயணிக்கும் நகரங்களில் உள்ள உணவுகளை சாப்பிட்டுக்கொள்ளலாம் எனவும் தெர்விக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
வீரர்களுக்கு ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறியில் பலவகையான உணவுகள் தயார் செய்து வழங்கப்படும் எனவும் அதிகப்படியாக ஹைதராபாத் உணவு வகைகள் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. பிசிசிஐ-இன் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இதுகுறித்து மற்ற நாடுகள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பி.சி.சி.ஐ. தலையீடா?
இதற்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கும் மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு அப்போது பிசிசிஐ தரப்பில் இருந்து, ”வீரர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை பிசிசிஐக்கு இல்லை. அவரவர்களின் விருப்படியே வீரர்கள் உணவு சாப்பிட அனுமதிக்கிறார்கள். சாப்பாடு குறித்து எந்த ஆலோசனையும், விதிமுறைகளும் இல்லை.
என்ன சாப்பிட வேண்டுமென்பது வீரர்களின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது. உணவுத் திட்டங்கள் தொடர்பான எந்த வழிகாட்டுதல்களையும் நாங்கள் வழங்கவில்லை. உணவுப் பழக்கத்தைப் பொறுத்த வரையில், அது வீரர்களின் தனிப்பட்ட விருப்பமே. இதில் பிசிசிஐக்கு எந்தப் பங்கும் இல்லை. சிலர் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டார்கள். ஆனால் மற்ற வீரர்கள் சாப்பிடும் போது அந்த உணவு கலக்காமல் செய்யப்படும். இது வழக்கமானது. இதில் பிசிசிஐ அறிவுறுத்தல் ஏதுமில்லை. சைவமோ, அசைவமோ அது வீரர்களின் விருப்பம் தான். அதற்கான முழு சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. இதில் ஒருபோதும் பிசிசிஐ தலையிடுவதில்லை” என விளக்கம் கொடுக்கப்பட்டது.