WT20 WC: களைகட்டத் தொடங்கிய மகளிர் டி20 உலகக்கோப்பை! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
மகளிர் டி20 உலகக்கோப்பை இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களை கீழே காணலாம்.
சமீப காலமாக ஆண்கள் கிரிக்கெட்டிற்கு இணையாக மகளிர் கிரிக்கெட் போட்டியும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால், அவர்களுக்கான கிரிக்கெட் போட்டித் தொடர்களை முன்பை விட அதிகளவில் நடத்துவதில் ஐ.சி.சி. ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், 9வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட உள்ளது. அதைப்பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கீழே காணலாம்.
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 எங்கு நடைபெறுகிறது?
மகளிர்களுக்காக நடத்தப்படும் ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை 2024 யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 எப்போது முதல் எப்போது வரை நடக்கிறது?
ஐ.சி.சி. நடத்தும் மகளிர் டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பையின் நடப்பு சாம்பியன் யார்?
கடந்த மகளிர் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது.
மகளிர் டி20 உலகக்கோப்பையில் குரூப் ஏ மற்றும் குரூப் பி –யில் எந்தெந்த அணிகள் உள்ளது?
குரூப் ஏ-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் உள்ளது.
குரூப் பி-யில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பையை இதற்கு முன்பு இந்தியா வென்றுள்ளதா?
மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதில்லை. மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 2020ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியதே இந்திய அணியின் சிறந்த செயல்பாடு ஆகும். ஆனால், அந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை பறிகொடுத்தது.
மகளிர் டி20 உலகக்கோப்பையை அதிக முறை வென்ற நாடு எது?
மகளிர் டி20 உலகக்கோப்பையை அதிக முறை வென்ற நாடு என்ற பெருமையை ஆஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது. 8 முறை நடைபெற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பையில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்று ஆஸ்திரேலியா அசத்தியுள்ளது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளது.