NZ vs AFG, Match Highlights: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியாவிற்கு டாட்டா சொன்ன வில்லியம்சனின் நியூசி. அணி !
ICC T20 WC 2021, NZ vs AFG: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் 2வில் நடைபெறும் இன்றைய சூப்பர் 12 போட்டியில் ஆஃப்கானிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் 3ஆவது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஷேசாத் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹசரத் ஷாசையும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்பு வந்த 10 ஓவர்களின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது. இறுதியில் நஜிபுல்லா ஷர்தான் 48 பந்துகளில் 73 ரன்கள் விளாசி ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 124 ரன்கள் எடுக்க உதவினார். இதைத் தொடர்ந்து 125 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கப்டில் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முதல் 6 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் 9ஆவது ஓவரில் ரஷீத் கான் வீசிய பந்தில் கப்டில் போல்ட் ஆகினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்தி ரஷீத் கான் அசத்தினார். அடுத்து களமிறங்கிய டேவான் கான்வே கேப்டன் வில்லியம்சன் உடன் ஜோடி சேர்ந்தார். ஒரு புறம் டேவான் கான்வே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் வில்லியம்சன் பவுண்டரிகள் அடித்து கொண்டிருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
New Zealand are into the semis 👏#T20WorldCup | #NZvAFG | https://t.co/paShoZpj88 pic.twitter.com/PRo6Ulw4Dk
— T20 World Cup (@T20WorldCup) November 7, 2021
சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நியூசிலந்து, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தற்போது அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதன்படி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதற்கு அடுத்து 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி 2 ஆவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தலா 2போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளனர்.
இந்நச் சூழலில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடும். நியூசிலாந்து வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது.
மேலும் படிக்க: பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய மனைவி: போலீசில் புகார் செய்த கணவர்!