ODI World Cup 2023: ஹாட்ரிக் கப் ஜெயிக்க நினைத்த கேப்டன்களின் கனவு.. மண் அள்ளிப்போடுவதில் நாமதான் ஸ்பெஷலிஸ்ட்..!
ICC Mens World Cup 2023: இந்திய ஒவ்வொரு முறையும் வலுவாக களமிறங்கினாலும் இதுவரை 2 முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது.
ICC Mens World Cup 2023: ஐசிசியால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொள்வதற்கு ஐசிசி நிர்ணயம் செய்யும் தரவரிசைகளை கிரிக்கெட் விளையாடும் நாடுகள் எட்டவேண்டும். கால்பந்து போல உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாடப்படவில்லை என்றாலும், சமீபகாலங்களாக கிரிக்கெட் மீதான மோகம் பெரும்பான்மையான நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
உலகக்கோப்பை:
இந்த உலகக்கோப்பையை நமது இந்திய அணி இரண்டு முறை வென்றுள்ளது. முதல் முறையாக 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான அணி பலமான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து கோப்பையை உலகக்கோப்பையை வென்றது. இதையடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி சவாலான இலங்கை அணிக்கு எதிராக கோப்பையை வென்றது.
இந்திய அணி கைப்பற்றிய இரண்டு கோப்பைகளுக்கும் ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அந்த தனிச்சிறப்பு என்பது இரண்டு கேப்டன்களின் பெரும் கனவை சுக்குநூறாக உடைத்த சிறப்புதான். இதன் மூலம் அந்த இரண்டு கேப்டன்கள் மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களின் பலநாள் தூக்கத்தை கெடுத்தது.
1983 - உலகக்கோப்பை
உலகக்கோப்பைத் தொடர் தொடங்கப்பட்ட காலத்தில் மிகவும் வலிமையான அணியாக இருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணிதான். அந்த அணி இறுதிப்போட்டிக்கு வந்துவிட்டது என்றால் போட்டி முடிவை எட்டும் முன்னரே கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் என்ற பெயரை பதிவு செய்யச் சொல்லும் அளவிற்கு மிகவும் பலமான அணி. அந்த காலகட்டத்தில் இந்திய அணி மிகவும் சுமாரான அணியாகத்தான் மற்ற நாடுகள் பார்த்தன. இந்நிலையில், இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே அன்றைய ஊடகங்கள் இந்திய அணி கோப்பையை வெல்வது சாத்தியமில்லாதது என எழுதித் தள்ளியது. வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் க்ளைவ் லாய்டு தலைமையில் ஏற்கனவே இரண்டு கோப்பைகளை வென்றிருந்தது. மூன்றாவது முறையாக கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என க்ளைவ் உட்பட வெஸ்ட் இண்டீஸ் அணியும் நினைத்துக்கொண்டு இருந்தது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு தனது முதல் கோப்பையை வென்றது.
2011 - உலகக்கோப்பை
இந்த உலகக்கோப்பை இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கும் முக்கியம். 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் இரண்டு கோப்பைகளை அடுத்தடுத்து வென்றது. மூன்றாவது முறையாக ரிக்கி பாண்டிங் தலைமையில் கோப்பையை வெல்ல வேண்டும் என ரிக்கி பாண்டிங்கும் அவரது ரசிகர்களும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் காத்துக்கொண்டு இருந்தது.
ஆனால் ஆஸ்திரேலிய அணியின் கனவில் குறிப்பாக ரிக்கி பாண்டிங்கின் உறுதியை உருக்குலைத்தது. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்ப, பாண்டிங் மட்டும் நங்கூரம் போல் நின்று சதம் விளாசினார். ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி போட்டியை வென்றது மட்டும் இல்லாமல், ஆஸ்திரேலியாவை தொடரில் இருந்து வீழ்த்தியது மட்டும் இல்லாமல், இறுதிப் போட்டியில் கோப்பையையும் வென்றது.
கனவில் மண் அள்ளிப்போடும் இந்தியா?
இந்திய ஒவ்வொரு முறையும் வலுவாக களமிறங்கினாலும் இதுவரை 2 முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. இந்த இரண்டு முறையும் இந்திய அணி தங்களது தலைமையில் அணிக்கு ஹாட்ரிக் கப் வென்று கொடுக்க முயற்சி செய்த கேப்டன்களை முறையடித்துதான் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா வென்ற கோப்பைகளின் வரலாற்றை பேசும் போது இதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டியுள்ளது.