ODI World Cup 2023: சொந்த மண்ணில் உலகக்கோப்பை.. இந்தியாவுக்கு சாதகமும் பாதகமும் என்னென்ன? க்ளியர் ரிப்போர்ட் இதோ
ODI World Cup 2023: அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. லீக் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளது.
ODI World Cup 2023: உலகக்கோப்பைத் திருவிழா துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. வரும் 25ஆம் தேதி முதல் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள பயிற்சிப் போட்டிகள் தொடங்கவுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் இந்த உலகக்கோப்பை நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்காக இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் 10 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு மைதானத்திற்கும் தலா ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்து மைதானங்களின் உட்கட்டமைப்பையும் தரத்தையும் மேம்படுத்தி வருகிறது. இந்த 10 மைதானங்களில் பெரும்பாலான மைதானங்கள், அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், மும்பை வான்கடே மைதானம், பெங்களூரூ சின்னச்சாமி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், புனேவில் உள்ள எம்.சி.ஏ மைதானம், டெல்லியில் அருண் ஜெட்லீ மைதானம், லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானம், தர்மசாலாவில் உள்ள HPCA மைதானம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானம் என மொத்தம் 10 மைதானங்களில் உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு உள்ள சிக்கல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் என்ற டி20 லீக் போட்டிகளை மிகவும் வெற்றிகரமாக நடத்திவந்துள்ளது. இந்த தொடருக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் பாகிஸ்தான் தவிர மற்ற நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் தொடருக்காக மற்ற நாட்டு வீரர்கள் இந்தியாவில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்து விளையாடுவதால் இந்தியாவின் சீதோஷ்ன நிலை, இந்தியாவில் உள்ள மைதானங்கள் எப்படி இருக்கும், அதற்கு ஏற்ற வகையில் எப்படி செயல்படவேண்டும் என ஒட்டுமொத்த மைதானங்கள் குறித்தும் க்ளியர் ரிப்போர்ட்டுடன் அனுபவமும் இருக்கும். இதில் இந்திய மைதானங்கள் குறித்த அனுபவமில்லாத அணியாக களமிறங்கும் அணிகள் என்றால் அது பாகிஸ்தானும், நெதர்லாந்து அணியும்தான். இந்திய மைதானங்கள் குறித்த அனுபவம் மற்ற அணிகளுக்கு போட்டிகளில் வெற்றியை நோக்கி முன்னேற பயனுள்ளதாக இருக்கும். இதனை மனதில் வைத்தே இந்த உலகக்கோப்பைக்கான வீரர்கள் தேர்வினை அனைத்து நாடுகளும் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு உள்ள சாதகமான நிலை
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கிறது என்பதே இந்தியாவுக்கு மிகவும் சாதகமான ஒன்று. மற்ற நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் மாலை நேரங்களில் விளையாடிய அனுபவம் இருந்தாலும் இந்தியாவின் வெயில் மற்ற அணி வீரர்களுக்கு பெரும் சவால் அளிப்பதாக இருக்கும். இந்திய அணியில் கடந்த ஓராண்டாக முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைவரும் அணிக்கு திரும்பி விட்டது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் உலகக்கோப்பைக்கான அணியினைக் கொண்டு ஆசிய கோப்பைய வென்றுள்ளது தனி தெம்பைக் கொடுத்துள்ளது. மேலும், அதே அணியினைக் கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்கவுள்ளதால் இந்த தொடரும் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.