T20 WC PAK vs SA : வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான்..! வெற்றியை தொடருமா தென்னாப்பிரிக்கா..?
T20 World Cup : சூப்பர் 12 சுற்றில் முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி இன்று தென்னாப்பிரிக்காவை நேருக்கு நேர் சந்திக்கின்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலககோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடத்ததில் சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், சூப்பர் 12 ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் இன்று முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த தொடரில் 2 தோல்வி, 1 தோல்வியுடன் உள்ள பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி வாழ்வா? சாவா? போட்டி ஆகும். சிட்னியில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது.
புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று, சூப்பர் 12 சுற்றின் மற்ற ஆட்டங்கள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு நனவாகும். அதேசமயம், 3 போட்டிகளில் ஆடி 2 வெற்றியுடன் எந்த தோல்வியையும் சந்திக்காமல் 5 புள்ளிகளுடன் உள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அவர்களின் அரையிறுதி உறுதி செய்யப்படும். பாகிஸ்தான் அணி தோற்றால் தொடரை விட்டு வெளியேறும்.
பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாமின் பார்ம் மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது. பாபர் அசாம் இன்றைய போட்டியில் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம் ஆகும். அதேபோல, தொடக்க வீரர் முகமது ரிஸ்வானும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். மிடில் ஆர்டர் வீரர்களான ஷான் மசூத், ஷதாப்கான், முகமது நவாஸ், முகமது ஹாரீஸ், இப்திகார் அகமது ஆகியோரும் அதிரடியாக ஆடினால் மட்டுமே பாகிஸ்தான் மிகப்பெரிய ரன்களை குவிக்கும்.
தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் ரோசோவ் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது அதிரடி இன்றும் தொடர்ந்தால் தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய ஸ்கோர் எட்டும். டி காக், மார்க்ரம், மில்லரும் அதிரடி காட்ட வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் பவுமா அதிரடியாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களான ஷாகின் அப்ரீடி, ஹரீஸ் ராஃப், நசீம்ஷா வேகத்தில் மிரட்ட வேண்டியது அவசியம் ஆகும். நவாஸ், ஷதாப் சுழலில் ஒத்துழைத்தால் அந்த அணிக்கு பக்கபலமாக அமையும். தென்னாப்பிரிக்கா அணியில் ரபடா, நோர்ட்ஜே, ஜான்சென் பந்துவீச்சிற்கு பக்கபலமாக இருக்கின்றனர். கிளாசெனும் வேகத்தில் மிரட்ட காத்திருக்கிறார்.
இந்த போட்டி இரு அணிக்கும் அரையிறுதி வாய்ப்பிற்கான போட்டி என்பதால் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 21 டி20 போட்டிகளில் ஆடியுள்ளனர். அதில் 11 முறை பாகிஸ்தானும், 10 முறை தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும் படிக்க : Virat Kohli Record: ஒரே போட்டியில் சச்சினின் இரண்டு ரெக்காரட்டுகளை எட்டி பிடித்த விராட் கோலி.. என்ன சாதனை தெரியுமா.. ?