"அந்த காலமெல்லாம் போயிடுச்சு…" : இந்திய அணி வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதை தொடர்ந்து சேவாக் ட்வீட்..
"மிக உயர்ந்த தரமான விருந்தோம்பலை வழங்குவதில் இந்தியா பெரும்பாலான மேற்கத்திய நாடுகளை விட முன்னணியில் உள்ளது" என்று வீரேந்திர சேவாக் ட்வீட் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 16 அணிகளுடன் துவங்கிய இந்த போட்டியில் தற்போது 12 அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன. தொடரை ஐசிசி நடத்துவதால், ஹோட்டல் அறைகள் முதல் போக்குவரத்து வரை எல்லா ஏற்பாடுகளையும் சர்வதேச கிரிக்கெட் வாரியம்தான் மேற்கொள்ளும். இந்திய அணி உள்ளிட்ட தொடரில் பங்கேற்கும் 16 அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு உணவு, தண்ணீர் என அனைத்தையும் ஐசிசி தான் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலையில், நேற்று பயிற்சி முடிந்து அறைக்கு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு உணவாக சாண்ட்விச்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சாண்ட்விச்கள் சூடில்லாமலும், சாப்பிட முடியாத அளவுக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய அணி நிர்வாகம், ஐசிசியிடம் புகாரளித்தது.
Gone are the days when one used to think that the Western countries offer so good hospitality. India are way ahead of most western countries when it comes to providing hospitality of the highest standards.
— Virender Sehwag (@virendersehwag) October 26, 2022
சேவாக் ட்வீட்
"மேற்கத்திய நாடுகள் மிகவும் நல்ல விருந்தோம்பலை வழங்குகின்றன என்று நினைத்த நாட்கள் எல்லாம் போய்விட்டன. மிக உயர்ந்த தரமான விருந்தோம்பலை வழங்குவதில் இந்தியா பெரும்பாலான மேற்கத்திய நாடுகளை விட முன்னணியில் உள்ளது" என்று வீரேந்திர சேவாக் ட்வீட் செய்துள்ளார். குளிர்ந்த சாண்ட்விச் வழங்கிய சம்பவத்தை குறித்து முன்னாள் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் போட்ட ட்வீட் விரைவில் வைரலானது.
நல்ல உணவை எதிர்பார்த்த வீரர்களுக்கு ஏமாற்றம்
நேற்று இந்திய அணி வீரர்கள் நெதர்லாந்து உடனான போட்டிக்கு விரும்பினால் பயிற்சி மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனிடையே, அணி நிர்வாகம் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பயிற்சியில் இருந்து நேற்று ஓய்வளித்தது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் ஆகியோரும் பயிற்சியில் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் போட்டியில் விளையாடி பிறகு பயிற்சியில் ஈடுபட்டு சோர்ந்து போன வீரர்கள் நல்ல உணவை எதிர்பார்த்திருக்கின்றனர்.
ஐசிசி தான் பிரச்சனை
"பிரச்சனை என்னவென்றால், ஐசிசி மதிய உணவிற்கு சூடான உணவை வழங்குவதில்லை. இருதரப்புத் தொடர் என்றால், ஹோஸ்ட் செய்யும் நாடு உணவு வழங்குவதற்குப் பொறுப்பாகும. அப்போது அவர்கள் எப்போதும் பயிற்சிக்குப் பிறகு சூடான இந்திய உணவை வழங்குகிறார்கள். ஆனால் ஐசிசிபோட்டியை நடத்துவதால், விதி எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறது. எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படுகிறது. உணவும் சூடில்லாமல் இருக்கிறது" என்று பிசிசிஐ இன் பெயர் கூறாத அதிகாரி கூறினார்.
ஐசிசி பதில்
"இரண்டு மணிநேர தீவிரப் பயிற்சிக்குப் பிறகு வெண்ணெய், தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றைக் கொண்ட குளிர்ந்த சாண்ட்விச் சாப்பிட முடியாது. அதுவும் ஃப்ரை செய்தது கூட இல்லை. அதில் வெறும் ஊட்டச்சத்து மட்டுமே இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார். ஐசிசி இந்த பிரச்சினையை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் இந்த விவகாரத்தை தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்துள்ளது. "ஆமாம், பயிற்சிக்குப் பிறகு இந்திய அணி உணவு தொடர்பான தங்கள் பிரச்சினைகளைப் பற்றி எங்களிடம் கூறியுள்ளது. நாங்கள் பிரச்சனை என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம், பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்" ,என்று ஐசிசி வட்டாரம் பிடிஐயிடம் தெரிவித்துள்ளது.