Ganguly on Rahane: 'இது போன்ற கம்பேக் பார்த்தது இல்லை' : ரஹானே குறித்து புகழ்ந்து தள்ளிய சவுரவ் கங்குலி!
"இது பிரமாண்டமானது என்று நினைக்கிறேன். கடந்த காலங்களில் பல மறுபிரவேசங்கள் நடந்துள்ளன, ஆனால் இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு வந்து இப்படி சிறப்பாக செயல்பட்டதாக யாரும் இல்லை"
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அஜிங்க்யா ரஹானே (89) மற்றும் ஷர்துல் தாக்குர் (51) ஆகியோரின் பங்களிப்பு காரணமாக டீம் இந்தியா 296 ரன்கள் வரை சென்றது. ஒரு ஆண்டுக்கு மேலாக அணியில் இல்லாமல், மீண்டும் வந்த ரஹானே, 152 ரன்களுக்குள் ஆறு விக்கெட்டுகள் என்ற நிலையில் தடுமாறி இருந்த அணியை சிக்கலில் இருந்து மீட்டு கொண்டு வந்தார். 35 வயதான ரஹானே ஒரு முனையில் நிற்க, அவருடன் காரம் கோர்த்து ஷர்துலும் ஒரு புறம் நன்றாக ஆடி வந்தார். இதனால இந்த ஜோடி, 109 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரில் வெறியாட்டம்
ரஹானே கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார், பின்னர் உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக ஆட, அதோடு 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முக்கியமான தருணங்களில் ரன்கள் குவித்து தனது கம்பேக்கை நிரூபித்தார். அதோடு அந்த அணி பட்டத்தை வென்ற நிலையில், அவரது பங்களிப்பும் அதில் அதிகம் என்பதால், அவரது கம் பேக் மேலும் வலுவானது.
18 மாதங்கள் என்பது பெரிய இடைவெளி
இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, ரஹானேவின் ஆட்டத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, இந்திய அணியில் பெரும் பங்காற்றி, வெளியில் சென்ற ஒரு பேட்டர் மீண்டும் திரும்புவது எளிதானது அல்ல என்று கூறியுள்ளார். “18 மாதங்களுக்குப் பிறகு அணிக்காக ஆடும் அவர் இவ்வளவு பெரிய பங்கை ஆற்றுவது மிகவும் முக்கியமானது. அவர் (ரஹானே) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 18 மாதங்கள் விலகி இருந்தார். ஒட்டுமொத்தமாக ஒரு ஆப்ஷனாகவே இல்லாமல் கூட பலர் மனதில் இருந்து அவர் நீங்கி இருக்கலாம், அனேகமாக அவரே கூட அந்த எண்ணத்திற்கு வந்திருக்கலாம். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மெனாக திரும்பி வந்து தனது பலத்தை நிரூபிப்பது எளிதல்ல," என்று கூறினார் கங்குலி.
இது போன்ற கம்பேக் பார்த்தது இல்லை
மேலும், "இது பிரமாண்டமானது என்று நினைக்கிறேன். கடந்த காலங்களில் பல மறுபிரவேசங்கள் நடந்துள்ளன, ஆனால் இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு வந்து இப்படி சிறப்பாக செயல்பட்டதாக யாரும் இல்லை" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் மதிய உணவு இடைவேளையின்போது சவுரவ் கங்குலி கூறினார். ”அவர் அற்புதமான வீரர். மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அவர் கடுமையாகப் போராடினார். மதிய உணவு வரை அவர் வெளிப்படுத்திய ஆட்டம் குறித்து அவரே மிகவும் பெருமைப்படுவார்" என்று கங்குலி கூறினார்.
இந்திய அணிக்கே கற்றுக்கொடுத்துள்ளார்
கங்குலி மேலும் கூறுகையில், ரஹானே இந்திய அணியில் உள்ள மற்ற பேட்டர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார்; அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங்-ஆர்டரில் பெரும் சரிவை எதிர்கொண்டது, முதல் நான்கு வீரர்கள் யாருமே 20 ரன்களை தாண்டி எடுக்கவில்லை என்பது பெரும் சோகம். "நீங்கள் உறுதியாக இருந்தால், இந்தியாவிடம் இருக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு கொஞ்சம் இருந்தால், இந்த ஆடுகளத்தில் நீங்கள் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்று அவர் ஒட்டுமொத்த டிரஸ்ஸிங் ரூமுக்கு காட்டினார், ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் நன்றாக ஆடினார்கள். ஷர்துல் இந்தியாவுக்காக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். இந்தியாவுக்கு இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்," என்று கங்குலி கூறினார்.