World Cup 2023: என்னடா பித்தலாட்டம் இது..! உலகக்கோப்பை பேரில் ஐசிசி செய்யும் மோசடி? நியாயமா ரங்கா..!
உலகக்கோப்பை தொடர் என்ற பெயரில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் தொடர் குறித்து, ரசிகர்கள் புதிய கேள்வி ஒன்றை எழுப்ப தொடங்கியுள்ளனர்.
உலகக்கோப்பை தொடர் என்ற பெயரில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் தொடர் குறித்து, ரசிகர்கள் புதிய கேள்வி ஒன்றை எழுப்ப தொடங்கியுள்ளனர்.
உலகக்கோப்பை:
சர்வதேச அளவில் புகழ்பெற்ற விளையாட்டுகளை மையப்படுத்தி உலக நாடுகள் அனைத்தையும் இணைத்து உலகக்கோப்பை என்ற தொடர் நடத்தப்படுவது வழக்கம். கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் மற்றும் செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இதுபோன்ற உலகக்கோப்பை தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடத்தப்படும் தொடர்களில் பெரும்பாலும், ஒட்டுமொத்த உலக வரைபடத்தையே இணைக்கும் வகையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் விவரங்களை கண்ட பிறகு, ”இது எப்டிங்க உலகக்கோப்பை ஆகும்” என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
அணிகளின் விவரங்கள்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி, நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, ஐதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.
Wolrd cup parithanbangal..!#WorldCup2023 pic.twitter.com/ad10rLvxFw
— Aarthi G (@aarthi_nachi) July 10, 2023
இதெப்படி உலகக்கோப்பை தொடராகும்..!
உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள அணிகளின் விவரங்களை பார்த்தால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவை. நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஐரோப்பிய கண்டத்தையும் சேர்ந்தவையாக உள்ளன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஒரே பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளாகும். ஆப்ரிக்காவில் இருந்து தென்ஆப்ரிக்கா மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த மொத்த அணிகளை உலக வரைபடத்தில் வைத்து பார்த்தால், நான்கு பிராந்தியங்கள் மட்டுமே விளையாடுவது போன்று காட்சியளிக்கிறது. இதனை குறிப்பிட்டு ”இதுக்கு பேரு தான் வோர்ல்ட் கப்பாடா” என சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஏன் இந்த நிலை?
கால்பந்தாட்டம், டென்னிஸ், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் தரவரிசைப்பட்டியலில் பின் தங்கியுள்ள பல சிறு அணிகள் கூட, உலகக்கோப்பை தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படுகின்றன. இதன் மூலம், சிறு அணிகளுக்கு கிடைக்கும் அனுபவம் அவர்களை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. ஆனால், கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து, நட்சத்திர அணிகள் மட்டுமே உலகக்கோப்பை தொடர்களில் விளையாடி வருகின்றன. சிறு அணிகளை சேர்ப்பதன் மூலம் பெரியதாக வருவாய் எதுவும் வரப்போவதில்லை என்ற, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் எண்ணமே இதற்கு காரணமாகிறது.
சிறு அணிகளுக்கு வாய்ப்பளிக்கலாமே..!
நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் 10 அணிகள் பங்கேற்று 34 போட்டிகளில் விளையாடின. வழக்கமாக, சிறு அணிகள் விளையாடும் இதுபோன்ற தகுதிச்சுற்று போட்டிகள் ரசிகர்கள் இடையே பெரிய கவனம் பெறுவதில்லை. ஆனால், இந்த முறை ஜிம்பாப்வே, நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளின் செயல்பாடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டிகளை தொலைக்காட்சிகளில் காணவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். இதன் மூலம், கிரிக்கெட்டில் யார் சிறப்பாக விளையாடினாலும் அதனை கொண்டாட ரசிகர்கள் தயாராக தான் உள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. இதனை உணர்ந்தாவது இனி வரும் உலகக்கோப்பை தொடர்களில், சிறு அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் உரிய வாய்ப்பளித்து உண்மையான உலகக்கோப்பை தொடரை நடத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.