Virat Kohli - Tejashwi Yadav: தேஜஸ்வி கேப்டன்சியில் விராட் கோலி உண்மையில் விளையாடினாரா?
விராட் கோலி தன்னுடைய கேப்டன்சியில் ஆடியவர் என்று பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியிருப்பது உண்மையா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிப்பவர் தேஜஸ்வி யாதவ், அந்த மாநில முன்னாள் முதலமைச்சரான லாலு பிரசாத் யாதவின் மகனான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகியது.
பரபரப்பை கிளப்பிய தேஜஸ்வி யாதவ்:
இந்திய கிரிக்கெட்டின் பிரபல வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனது கேப்டன்சியின் கீழ் விளையாடியவர் என்றும், பலருக்கும் அது தெரியாது என்றும் கூறியிருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், கேள்வியையும் எழுப்பியது. தேஜஸ்வி யாதவ் கூறியது உண்மையா? இல்லையா? என்பது குறித்து குழப்பமும் ஏற்பட்டது.
விராட் கோலிக்கே கேப்டனா?
பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ் சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பலவற்றிலும் ஆடியுள்ள இவர் விராட் கோலியுடன் இணைந்து கிரிக்கெட் ஆடியிருக்கிறார் என்பது உண்மையே.
டெல்லி அணிக்காக விராட் கோலியும், தேஜஸ்வி யாதவும் இணைந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான வினு மன்கட் டிராபி தொடரிலும், 15 வயதுக்குட்பட்டோருக்கான பாலி உம்ரிகர் டிராபி தொடரிலும் டெல்லி அணிக்காக இணைந்து ஆடியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சிறு வயதிலே டெல்லி அணிக்காக பல போட்டிகளுக்கு கேப்டனாக ஆடியுள்ளார்.
விராட் கோலியின் கேப்டன்சியில் தேஜஸ்வி யாதவ் ஏராளமான போட்டிகளில் ஆடியதற்கான சான்றுகள் உள்ளது. தேஜஸ்வி யாதவும் டெல்லி அணிக்காக சில போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். ஆனால், அவர் கேப்டனாக பொறுப்பு வகித்த போட்டிகளில் விராட் கோலி வீரராக ஆடினாரா? என்பதற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஒரு வேளை கிளப் அல்லது பள்ளி கிரிக்கெட்டில் தேஜஸ்வி யாதவின் கேப்டன்சியில் விராட் கோலி கேப்டன்சியில் விளையாடினாரா? என்பது தெரியவில்லை.
டெல்லி வீரர்:
தேஜஸ்வி யாதவ் ஒரு முதல்தர கிரிக்கெட், இரண்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட் மற்றும் 4 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் ஜார்க்கண்ட் அணிக்காக ஆடியுள்ளார். நவம்பர் 2009ம் ஆண்டு விதர்பா அணிக்கு எதிராக அறிமுகமானார். 2010ம் ஆண்டு லிஸ்ட் ஏ போட்டியில் ஒரிசா மற்றும் திரிபுரா அணிகளுக்கு எதிராக ஆடியுள்ளார். பெங்கால், திரிபுரா, அசாம் மற்றும் ஒரிசா அணிகளுக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் ஆடியுள்ளார்.
பதின்ம வயதில் நல்ல கிரிக்கெட் வீரராக திகழ்ந்த தேஜஸ்வி யாதவ் ஐ.பி.எல். தொடரிலும் பங்கேற்றவர் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகும். அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை அவர் பங்கேற்றுள்ளார். ஆனால், அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.