(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG Test: இந்திய அணியை ஒயிட் வாஷ் முறையில் வீழ்த்துவோம்.. இங்கிலாந்து வீரரின் பேச்சு
IND v ENG Test: விராட் கோலி விளையாடி இருந்தால் அவர் இங்கிலாந்து அணி வீரர்களிடம் சென்று வம்பு இழுத்து இருப்பார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவை டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீழ்த்தியது இல்லை. இச்சூழலில்தான் இந்த முறை எப்படியும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைக்க வேண்டும் என்பதில் இங்கிலாந்து அணி குறிக்கோளாக இருக்கிறது. அதற்கான எடுத்துக்காட்டு தான் முதல் டெஸ்ட் போட்டி என்பது போல் அந்த அணி வீரர்கள் கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அந்த அணியினருக்கே உரித்தான பாஸ்பால் எனும் அதிரடி ஆட்ட யுக்தியை இந்திய அணிக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.
முன்னதாக, பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இதே யுக்தியை பயன்படுத்தித்தான் அந்த அணி ஒயிட் வாஷ் முறையில் வெற்றி பெற்றது.
இந்திய அணியை வீழ்த்துவோம்:
இந்நிலையில்தான் 2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி கேரள மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. இதனிடையே இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மாண்டி பனேசர் இந்த முறை இந்திய அணியை தங்கள் அணி 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி மாபெரும் சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “ நான் சொல்வது நிச்சயம் நடக்கும். அதேநேரம் ஒல்லி போல் மற்றும் டாம் ஹார்ட்லி இதே போல் விளையாட வேண்டும். அப்படி அவர்கள் விளையாடினால் இந்திய அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்த முடியும். முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 190 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி நிச்சயம் தோற்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஒல்லி போப் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடி இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆட்டத்தைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.
விராட் கோலி இருந்திருந்தால்:
இங்கிலாந்தின் ஆட்டத்தை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமலே ரோஹித் சர்மா நின்றார். இங்கிலாந்து வீரர்கள் சுதந்திரமாக ஆடுவதை முதலில் இந்திய அணி நிறுத்த வேண்டும். இதுவே விராட் கோலி விளையாடி இருந்தால் அவர் இங்கிலாந்து அணி வீரர்களிடம் சென்று வம்பு இழுத்து இருப்பார். ஏதேனும் பேசி அவர்களுடைய கவனத்தை சிதைத்து இருப்பார். எங்கே மீண்டும் இதே போல் விளையாடி எங்கே இந்த ஷாட்டை திரும்பி அடி என்று இங்கிலாந்து வீரர்களிடம் கேட்டிருப்பார். வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து அணி பெரும் மிகப்பெரிய வெற்றியாக முதல் டெஸ்ட் போட்டியை நான் கருதுகிறேன். இது இங்கிலாந்தில் மிகப்பெரிய செய்தியாக மாறி இருக்கிறது. நாங்கள் அனைவரும் ஏதோ உலக கோப்பையை வென்றதுபோல் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.