ENGvsNZ: உலகக்கோப்பை அறிமுக போட்டியிலே அபார சதம்.. இங்கிலாந்தை மிரட்டிய கான்வே - ரவீந்திரா!
உலகக்கோப்பையின் தொடக்கப் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கான்வே சதம் விளாசி அசத்தியுள்ளார்.
ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன.
283 ரன்கள் டார்கெட்:
இதில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்காக கான்வே – வில் யங் தொடக்க வீரராக களமிறங்கினர்.
கான்வே முதல் பந்திலே பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், மறுமுனையில் வில் யங் டக் அவுட்டானார். அதன்பின்பு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா – கான்வே ஜோடி அபாரமாக ஆடினர். குறிப்பாக, கான்வே பவுண்டரிகளை விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த ரவீந்திராவும் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார்.
ரவீந்திரா சதம்:
சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த கான்வே 83 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்ஸருடன் சதம் விளாசினார். 32 வயதான கான்வே 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆடுவது இதுவே முதன் முறை ஆகும். தான் ஆடும் முதல் உலகக்கோப்பை தொடரின் அறிமுக போட்டியிலே சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை கான்வே படைத்துள்ளார்.
மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து அதிரடி காட்டி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு வீரரான ரச்சின் ரவீந்திராவும் சதம் விளாசினர். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து அணி கடுமையாக முயற்சித்தும் எந்த பலனும் அளிக்கவில்லை.
உலகக்கோப்பை அறிமுக போட்டி:
கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், மார்க் வுட், மொயின் அலி, ரஷீத் என யார் வீசினாலும் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களும் அபாரமாக எதிர்கொண்டனர். கான்வேவிற்கு ஒத்துழைப்பு அளித்த ரச்சின் ரவீந்திராவும் அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவர் 82 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி இந்த சதத்தை பூர்த்தி செய்தார். 23 வயதே நிரம்பிய ரவீந்திரா நியூசிலாந்து அணியின் சிறந்த வீரராக உருவெடுத்து வருகிறார். இதுவரை 13 போட்டிகளில் ஆடியுள்ள அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை தொடரில் முதன்முறையாக ஆடும் ரவீந்திராவுக்கும் இதுவே முதல் உலகக்கோப்பை போட்டி ஆகும். ஒரே அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் தங்களது உலகக்கோப்பை தொடரின் அறிமுக போட்டியாக ஒரே போட்டியிலே சதம் விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது. கான்வே – ரவீந்திரா ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. சிறந்த வலுவான பந்துவீச்சு படையை கொண்ட இங்கிலாந்து அணியின் வேகம், சுழல் இரண்டுமே இன்று எடுபடவில்லை.
மேலும் படிக்க: ENG vs NZ ODI WC 2023: இறுதியில் அதிரடி காட்டிய இங்கிலாந்து; 283 ரன்கள் இலக்கு; பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?
மேலும் படிக்க: ODI World Cup 2023: தொடங்குகிறது ஐசிசி உலகக் கோப்பை - போட்டியையே மாற்றும் திறன் கொண்ட அந்த 10 வீரர்கள் யார்?