Dinesh Karthik: "பெரிய தப்பு பண்ணிட்டேன்" தோனியால் மனம் வருந்திய தினேஷ் கார்த்திக் - என்னாச்சு?
தன்னுடைய ஆல் டைம் பேவரைட் அணியில் தோனியை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், இவர் கடந்த சுதந்திர தினத்தின்போது தன்னுடைய ஆல் டைம் இந்திய அணியை கூறியிருந்தார். அதில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியாவிற்காக டி20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று கொடுத்த தோனிக்கு தினேஷ் கார்த்திக்கின் ஆல் டைம் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
பெரிய தப்பு பண்ணிட்டேன்:
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய ஆல் டைம் இந்திய அணியில் தோனியைச் சேர்க்காததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கூறியுள்ள தினேஷ் கார்த்திக், நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். இந்த எபிசோட்கள் வெளிவந்தபோதுதான் அதை உணர்ந்தேன். இந்தியாவில் மட்டுமின்றி தோனி அனைத்து வடிவத்திற்கும் பொருத்தமானவர். தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர் என்றே உணர்கிறேன். அணியை மீண்டும் மாற்றுவது என்றால், தல தோனிக்கு 7வது இடம். மேலும், இந்திய அணிக்கு அவரே எப்போதும் கேப்டன் ஆவார் என்றும் கூறியுள்ளார்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீரராகவும், கேப்டனாகவும் தோனி இந்திய அணிக்காக பல போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்துள்ளார். தொடக்க வீரர் முதல் டெயிலண்டர் வரை தோனி பல பேட்டிங் ஆர்டரில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார்.
ஆல் டைம் இந்திய அணி:
தினேஷ் கார்த்திக்கின் ஆல் டைம் பேவரட் அணியில் ரோகித் சர்மா – சேவாக் தொடக்க வீரர்கள் ஆவார்கள். 3வது வீரராக ராகுல் டிராவிட்டும், 4வது வீரராக கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரையும் சேர்த்துள்ளார். 5வது வீரராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை கூறியுள்ளார்.
தினேஷ் கார்த்திக்கின் 6வது வீரராக யுவராஜ் சிங்கும், 7வது வீரராக ஜடேஜாவும், எட்டாவது வீரராக அஸ்வினும் இடம்பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ராவும், ஜாகிர்கானையும் தேர்வு செய்துள்ள தினேஷ் கார்த்திக் தனது அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளராக அனில் கும்ப்ளேவை தேர்வு செய்துள்ளார். தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ள அணியின் பிரதான ஆல்ரவுண்டர்களாக யுவராஜ்சிங், அஸ்வின், ஜடேஜாவை தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோனிக்கு முன்னதாக இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இடம்பிடித்தவர் தினேஷ் கார்த்திக். ஆனால், தோனியின் வருகைக்கு பிறகு அவரால் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. விக்கெட் கீப்பராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் அசத்தத் தொடங்கிய தோனி பின்னாளில் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் உருவெடுத்தார்.