ரூ.3 கோடி பரிசு.. டிஎஸ்பியான கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா!
Deepti Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா, துணைக் காவல் கண்காணிப்பாளராக (Deputy Superintendent of Police) நியமிக்கப்பட்டுள்ளார்.
100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான தீப்தி சர்மா ஆல் ரவுண்டராக விளையாடி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதேபோல், கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலும், 2016 ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக அறிமுகமானார். இதனிடையே தான் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக, ஆடவர் அணியை பொறுத்தவரை யுஸ்வேந்திர சாஹல் மட்டும் தான் சர்வதேச டி 20 போட்டிகளில் அதிகபட்சமாக 91 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மேலும், டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் 100 விக்கெட்டுகளை கடந்த 9-வது வீராங்கனை என்ற பெருமையும் தீப்தி பெற்றிருக்கிறார்.
காவல் கண்காணிப்பாளரான தீப்தி சர்மா:
இந்நிலையில் தான் உத்தரப்பிரதேச அரசு இவரின் திறமையை அங்கீகரித்துள்ளது. அதன்படி, துணை காவல் கண்காணிப்பாளர் என்ற உயரிய பதவியை இவருக்கு வழங்கியிருக்கிறது. அதோடு தீப்தி சர்மாவுக்கு 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் விருதையும் வழங்கி கெளரவித்துள்ளது. மேலும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பணி நியமன கடிதத்தையும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழங்கியுள்ளார். முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவத்புரி பகுதியில் கடந்த 1997 ஆம் ஆண்டு பிறந்த இவர் தீபக் சாஹர் போன்ற உள்ளூர் கிரிக்கெட்டர்களுடன் இணைந்து விளையாடி தான் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
அங்கு தன்னுடைய திறமையை மெருக்கேற்றிகொண்ட இவர் கடும் உழைப்பால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றார். அதன்படி, இதுவரை சர்வதேச் அளவில் 194 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 229 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். அதேபோல், கடந்த ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை தீப்தி சர்மா கைப்பற்றினார். சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தனக்கு காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கியது குறித்து தீப்தி சர்மா கூறுகையில், "ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் சிறந்து விளங்கியதற்காக அங்கீகரிப்பட்டு உத்தரப்பிரதேச முதல்வரால் காவல் துறையில் நான் டிஎஸ்பி யாக நியமிக்கப்பட்டேன். என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க:IND v ENG Test: 3-வது டெஸ்ட் போட்டியிலாவது அணிக்கு திரும்புவாரா விராட் கோலி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
மேலும் படிக்க:Mitchell Starc: "களத்திற்கு வெளியே விராட் கோலி வேற மாதிரி" : அனுபவம் பகிர்ந்த மிட்செல் ஸ்டார்க்!