David Warner: நாயகன் மீண்டும் வரார்.. கிரிக்கெட் வீரர் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம்?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் (david warner) மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச போட்டிகளில் அசத்தும் வார்னர்:
கடந்த 2009ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணிக்காக, டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளிலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய தொடக்க வீரராக திகழ்ந்து வருகிறார். 2015ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும், 2021ம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோபை தொடரிலும், ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்கு வகித்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், இந்தியாவிலும் தனி ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார். ஐதராபாத் அணியின் கேப்டான சிறப்பாக செயல்பட்டு, இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அதில் ஒரு முறை கோப்பையையும் வென்று அசத்தினார்.
உப்புக் காகிதம் சர்ச்சையில் சிக்கிய வார்னர்:
கிரிக்கெட் உலகில் வார்னர் மிகவும் பிரபலமாக இருந்த் சூழலில், கடந்த 2018-இல் தென்னாப்பிரிக்க நாட்டில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையின் முடிவில் குற்றம் உறுதியானதால், அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பாங்கிராஃப்ட் ஆகியோருக்கு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஓராண்டிற்கு தடை விதிக்கப்பட்டது.
வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை:
கூடுதலாக, ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்க வார்னருக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. அந்த தடையை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வார்னருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். இதனிடையே, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்ச்சால், பெரிதாக சோபிக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையிலும் அவரது ஆட்டம் மோசமடைந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் விதிகளில் மாற்றம்:
பின்ச்சின் ஓய்வு முடிவை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த சரியான மூத்த வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், தற்போது அந்த அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி கேப்டனாக பாட் கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார். அடுத்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், விரைந்து முழுநேர கேப்டன் ஒருவரை நியமிக்க ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான், வார்னர் மீதான வாழ்நாள் தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வீரர்களுக்கான நடத்தை நெறிமுறைகளில் திருத்தம் செய்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் வாங்கியிருக்கிறது இதன்மூலம் கேப்டன் பொறுப்பை வகிக்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து , பாதிக்கப்பட்ட நபர் விண்ணப்பிக்கலாம் என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கேப்டனாகிறார் வார்னர்?:
இதன்மூலம் வாழ்நாள் தடையை எதிர்த்து டேவிட் வார்னர் தகுந்த விளக்கம், ஆதரங்களுடன் விண்ணப்பிக்க முடியும். அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தால், வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை விலக்கிக் கொள்வது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கும். அதைதொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியை, வார்னர் வழிநடத்தக்கூடும். முன்னதாக, அடுத்த 12 மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற உள்ளதாக, அண்மையில் டேவிட் வார்னர் அறிவித்தார்.