Champions Trophy 2025: தள்ளாடும் இங்கிலாந்து! சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் - ரசிகர்கள் உற்சாகம்
Afghanistan: உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி, 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நேரடி தகுதி பெற்றுள்ளது.
உலகக் கோப்பையை தொடர்ந்து 2025ம் ஆண்டு நடைபெற உள்ள, ஐசிசி சாம்பியன்ஸ் தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை அணி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, லீக் சுற்றின் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி மட்டுமே தற்போது வரை அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 5 அணிகள் கடுமையாக முட்டி மோதி வருகின்றன. இதனால், ஒவ்வொரு போட்டியும் தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஆப்கானிஸ்தான் அபாரம்:
நடப்பு உலகக் கோப்பையில் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அதில் 5 அணிகள் ஆசிய கண்டத்திலிருந்தே பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவிற்கு அடுத்தபடியாக நடப்பு உலகக் கோப்பையில் அதிக ஆதிக்கம் செலுத்தும் ஆசிய அணியாக உருவெடுத்துள்ளது ஆப்கானிஸ்தான். இந்திய அணி இதுவரை 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டதோடு, 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கானிஸ்தான்:
2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க, மொத்தம் 8 அணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது போட்டியை நடத்தும் பாகிஸ்தான் போக, உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும். தற்போதைய சூழலில் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தன் 5வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும், 8வது இடத்திற்கு கீழே ஆப்கானிஸ்தான் அணி சரிவடையாது. இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது போன்று, சம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் ஆப்கானிஸ்தன் நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
தள்ளாடும் இங்கிலாந்து:
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து இதுவரை 6 லீக் போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் மீதமுள்ள 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, 8வது இடத்திற்காவது முன்னேற முடியும். வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மீதமுள்ள போட்டிகளில் தோற்க வேண்டியதும் இங்கிலாந்து அணிக்கு அவசியம். ஒருவேளை உலகக் கோப்பை லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களுக்குள் இங்கிலாந்து நுழையாவிட்டால், 2025ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் அந்த அணியால் பங்கேற்க முடியாது.