ஒரு தமிழன் இன்.. ஒரு தமிழன் அவுட்! சவாலை சமாளிக்குமா இந்திய அணி?
தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், இன்று தொடங்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது. தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில், இன்று தொடங்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு தமிழன் இன்.. ஒரு தமிழன் அவுட்!
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஓய்வை தொடர்ந்து, சுப்மன்கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இச்சூழலில், இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர், பும்ராவுக்கு பதில் நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிரடி மாற்றங்கள்:
இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் சவால் மிகுந்ததாக அமைந்துள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்த மைதானத்தில் இந்திய அணி 1967ம் ஆண்டு முதல் ஆடி வருகிறது. அதாவது, கடந்த 58 ஆண்டுகாலத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 1 போட்டியில் கூட வெற்றி பெற்றதே இல்லை. 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.
மிக மோசமான வரலாற்றை இந்த மைதானத்தில் வைத்துள்ள இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி கடும் சவாலை அளிக்கத் தயாராக உள்ளது. முதல் டெஸ்ட்டில் ஆடிய அதே 11 வீரர்களே இந்த போட்டியிலும் ஆடுவார்கள் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சவாலை சமாளிக்குமா இந்திய அணி?
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் முதல் ஆட்டத்தில் பேட்டிங் பாராட்டும் வகையில் இருந்தது. இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன், கருண் நாயர் பேட்டிங்கில் சொதப்பினர். பின்வரிசை வீரர்கள் பேட்டிங்கில் பெரியளவில் பங்களிக்காததும் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதை தவிர, கேட்ச்களை கோட்டைவிட்டதும் முதல் போட்டியை இந்திய அணி தவறவிட்டதற்கு முக்கிய காரணம் ஆகும்.
முதல் போட்டியில் செய்த தவறுகள் அனைத்தையும் சரி செய்து, இந்த போட்டியில் இந்திய அணி வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




















