BCCI Warning to Kohli: 'இதுதான் கடைசி..' விராட்கோலியை எச்சரித்த பி.சி.சி.ஐ... அதிர்ந்துபோன ரசிகர்கள்..!
யோ - யோ டெஸ்ட் மதிப்பெண்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விராட்கோலியை பி.சி.சி.ஐ. எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் மிக தலைசிறந்த கிரிக்கெட் வீரராக உலா வருபவர் விராட்கோலி. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திறமையான மற்றும் உடற்தகுதியுள்ள வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு யோ-யோ தேர்வு நடத்துகிறது.
யோ - யோ டெஸ்ட்:
மிக கடினமான பயிற்சிகளை கொண்ட இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அப்படி தேர்ச்சி பெறாவிட்டால் அணியில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இந்த நிலையில், நட்சத்திர வீரரான விராட்கோலி தன்னுடைய யோ – யோ தேர்வின் மதிப்பெண்ணை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அவர் யோ – யோ தேர்வில் 17.2 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாக பதிவிட்டிருந்ததற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தாலும் தற்போது அது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்த விதிப்படி, யோ – யோ டெஸ்ட் மதிப்பெண்களை வெளியிடுவது விதிமீறல் ஆகும். இதன் காரணமாக, பி.சி.சி.ஐ. விராட்கோலியை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலிக்கு எச்சரிக்கை:
இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. அதிகாரிகள், வீரர்கள் மிகவும் ரகசியமான தகவல்களை பொதுவெளியில் அதாவது சமூக வலைதளங்கள் போன்றவற்றில் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் பயிற்சியின்போது எடுக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடலாம். ஆனால், மதிப்பெண் விவரங்களை வெளியிடுவது ஒப்பந்த விதியை மீறுவது ஆகும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய வீரர்கள் தற்போது எதிர்வரும் ஆசிய கோப்பைக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விராட்கோலி, ரோகித்சர்மா, பும்ரா என முன்னணி வீரர்கள், இளம் வீரர்கள் அனைவருக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி வீரர்களின் உடற்தகுதியை சோதிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. பிரபல வீரர் விராட்கோலியை பி.சி.சி.ஐ. எச்சரித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராட்கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தற்போது வரை மிகவும் கட்டுக்கோப்பான உடல்தகுதியை கொண்டுள்ளார். யோ – யோ டெஸ்டில் எப்போதுமே விராட்கோலி மிகச்சிறப்பான மதிப்பெண்களை பெற்று வருகிறார் என்று தகவல்கள் அவ்வப்போது வெளிவரும் நிலையில், அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விராட்கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு அடுத்த 2 மாதம் மிகப்பெரிய போட்டிகள் காத்துள்ளது. ஆசிய கோப்பை வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அக்டோபர் 5-ஆம் தேதி உலகக்கோப்பை திருவிழா தொடங்கவுள்ளது. இந்த முறை உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.