Virat Kohli: தனிப்பட்ட காரணம்.. இங்கிலாந்து தொடரில் இருந்து முழுமையாக விலகிய விராட் கோலி - இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பல இளம் மற்றும் புது வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், வேகப்பந்து வீச்சு பிரிவில் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருடன் இளம் வீரரான ஆகாஷ் தீப்பும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுழல் பிரிவில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோருடன் வாஷிங்டன் சுந்தரும் இடம் கிடைத்துள்ளது.
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் தொடர் முழுவதும் விலகல்:
நட்சத்திர பேட்ஸ்மேனும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தனிப்பட்ட காரணங்களால் விளையாடவில்லை. முதல் இரண்டு டெஸ்டில் கூட விராட் கோலி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக கடைசி மூன்று டெஸ்டில் அணியில் இடம்பெற மாட்டார் எனவும், முழு தொடரிலிருந்தும் வெளியேறியதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
India team for the last 3 Tests vs England:
— Johns. (@CricCrazyJohns) February 10, 2024
Rohit (C), Bumrah (VC), Jaiswal, Gill, Rahul, Patidar, Sarfaraz, Dhruv Jurel, Bharat, Ashwin, Jadeja, Axar, Sundar, Kuldeep, Siraj, Mukesh, Akash Deep. pic.twitter.com/VXfXBrnwNd
தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி தொடரின் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்று அணியின் அறிவிப்புடன் பிசிசிஐ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. கோலியின் முடிவை வாரியம் முழுமையாக மதித்து ஆதரிக்கிறதாகவும் அதில் தெரிவித்திருந்தது.
ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், போட்டியில் பங்கேற்பது பிசிசிஐ மருத்துவக் குழுவின் உடற்தகுதி அனுமதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிசிசிஐ மருத்துவக் குழு இவர்கள் இருவரும் ஃபிட் என்று அறிவிக்கும் போதுதான் ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் விளையாடும் லெவனில் இடம் பெறுவார்கள்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 அன்று ராஜ்கோட்டிலும், நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கேஎல் ராகுல், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்) , ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.