Babar Azam: பாபரின் பரிதாபங்கள்! ஆஸ்திரேலியாவில் சொதப்பு சொதப்புனு சொதப்பிய பாகிஸ்தான் லெஜண்ட்!
ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் லீக்கில் பாகிஸ்தானின் ஜாம்பவான் வீரர் பாபர் அசாம் மோசமாக ஆடி வருகிறார். இதனால், ரசிகர்கள் இவரை விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமாகியவர் பாபர் அசாம். இவரது பேட்டிங் ஸ்டைல், திறமை ஆகியவற்றை கண்டு இவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டனர். ஆனால், சமீபகாலமாக இவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலைக்குரிய வகையில் உள்ளது.
பரிதாப நிலையில் பாபர் அசாம்:
பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற பிக்பாஸ் லீக் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறார். இந்த சீசனில் இவர் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்த சீசனில் இவரது பேட்டிங் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் இல்லாதது இவரது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாபர் அசாமை இணையத்திலும் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் அணியுடன் ஏராளமான நாடுகள் கிரிக்கெட் விளையாட தயங்கிய காரணத்தால், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானிலும், துபாயிலும் மட்டுமே அதிகளவு போட்டிகளில் ஆடியுள்ளனர்.
தடுமாறும் பாகிஸ்தானியர்கள்:
இதனால், அவர்கள் வெளிநாட்டு மண்ணில் கிரிக்கெட் விளையாடும்போது தடுமாறி வருகின்றனர். குறிப்பாக, ஆசிய கண்டம் தாண்டிய மைதானங்களில் ஆடும்போது மிகவும் தடுமாறுகின்றனர். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் ஆடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்னறர்.
202 ரன்கள்:
தற்போதைய பிபிஎல் கிரிக்கெட் தொடரிலும் இதுவே பாபர் அசாமிற்கு நிகழ்ந்துள்ளது. அவர் இந்த சீசனில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் ஆடி 202 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் 2 முறை மட்டுமே அரைசதம் விளாசியுள்ளார். அரைசதம் விளாசிய போட்டிகளிலும் அதிகி பந்துகளை எடுத்துக்கொண்டுள்ளார். ஒற்றை இலக்கத்தில் அடிக்கடி அவுட்டாகியுள்ளார். கடைசியாக ஆடிய போட்டியிலும் டக் அவுட்டானார்.
ஒரு போட்டியில் பாபர் அசாம் 3 பந்துகள் டாட் ஆடிவிட்டு கடைசி பந்தில் ரன் எடுக்க அழைக்க, ஸ்டீவ் ஸ்மித் அதற்கு மறுப்பு தெரிவித்துவிடுவார். அந்த போட்டியில் பாபர் அசாம் மிகவும் மந்தமாக ஆடியதாலே ஸ்டீவ் ஸ்மித் அவ்வாறு செய்தார். இதற்காகவும், பாபர் அசாமை மிகவும் கடுமையாக ரசிகர்கள் விமர்சித்தனர்.
விமர்சனங்கள்:
பாபர் அசாம் மட்டுமின்றி முகமது ரிஸ்வானை பேட்டிங் செய்து கொண்டிருந்தபோதே மந்தமாக ஆடியதற்காக பெவிலியனுக்கு அழைத்தது, பாகிஸ்தானின் நம்பர் 1 பந்துவீச்சாளர் ஷாகின் அஃப்ரிடி பீமர் பந்துவீசியதற்காக அவரிடம் இருந்து பாதியிலே ஓவர் மாற்றப்பட்டது உள்பட பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்த பிபிஎல் சீசன் மறக்கப்பட வேண்டிய சீசனாகவே உள்ளது.
31 வயதான பாபர் அசாம் இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் 4 ஆயிரத்து 366 ரன்களை குவித்துள்ளார். இதில் 9 சதங்கள், 30 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 196 ரன்கள் எடுத்துள்ளார். 140 ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரத்து 501 ரன்களை எடுத்துள்ளார். 20 சதங்கள், 37 அரைசதங்கள் எடுத்துள்ளார். 136 டி20 போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 429 ரன்களை எடுத்துள்ளார். அதில் 3 சதங்கள், 38 அரைசதங்கள் அடங்கும்.
விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்ட இவர் சமீபகாலமாக பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். சொந்த மண்ணில் மட்டும் சிறப்பாக ஆடும் பாபர் அசாமால் வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக ஆடுவது தொடர்ந்து சவாலாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















