Babar Azam Record: கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை.. ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களை எட்டிய பாபர் அசாம்
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக ஐயாயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக ஐயாயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் படைத்துள்ளார். இந்த மைல்கல்லை வெறும் 97 இன்னிங்ஸ்களில் அவர் எட்டியுள்ளார்.
பாபர் ஆசம் புதிய சாதனை:
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 28 வயதை எட்டியுள்ள நிலையில், இருநாள் போட்டிகளில் 5000 ரன்களை எட்டியுள்ளார். முன்னதாக தென்னாப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா வெறும் 101 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டி, அதிவேகமாக 5000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். இந்நிலையில், பாபர் அசாம் வெறும் 97 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டி, ஹசிம் அம்லாவின் சாதனையை முறியடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் போது, 19 ரன்களை சேர்த்த போது இந்த புதிய மைல்கல்லை பாபர் அசாம் எட்டினார்.
ஒருநாள் போட்டிகளில் பாபர்:
28 வயதான பாபர் அசாம் கடந்த 2015ம் ஆண்டு ஜிம்பபே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கினார். இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 97 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 5000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். முன்னதாக, தென்னாப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (81), நான்காயிரம் ரன்களை கடந்துள்ளார். அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பாபர் நூலிழையில் கடந்த அண்டு தவறவிட்டார். இந்நிலையில், ஆம்லாவின் மற்றொரு சாதனையை பாபர் தகர்த்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில், கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து பாபர் அசாம் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு முறை ஹாட்ரிக் சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையும் பாபரையே சேரும்.
அதிவேகமாக 5000 ரன்களை கடந்த வீரர்கள்:
97 ஈன்னிங்ஸ்களில் 5000 ரன்களை கடந்து பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஹசிம் ஆம்லா 101 இன்னிங்ஸ்களிலும், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஜாம்பவானான சர் விவ் ரிச்சர்ட்ஸ் 114 இன்னிங்ஸ்களிலும் 5000 ரன்களை எட்டியுள்ளனர். அவர்களை தொடர்ந்து, விராட் கோலி 114 இன்னிங்ஸ்களிலும், டேவிட் வார்னர் 115 இன்னிங்ஸ்களிலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்துள்ளனர்.
14வது பாகிஸ்தன் வீரர்:
ஒருநாள் போட்டிகளில் ஐயாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த 14வது பாகிச்தான் வீரர் பாபர் அசாம். அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் தான், பாகிஸ்தான் சார்பில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதன்படி, அவர் ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரத்து 701 ரன்களை குவித்துள்ளார். தற்போது உள்ள ஃபார்மையே பாபர் அசாம் தொடர்ந்தால், வெகு விரைவிலேயே பாகிஸ்தான் சார்பில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் சார்பில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற இன்சமாம் உல் -ஹக்கில் சாதனையை முறியடிக்கக் கூடும்.