T20 World Cup | இறுதிப்போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணி... கோப்பையை தட்டிப்பறிக்கும் அணி எது..?
கடந்த 2015 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி கோப்பையை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடைபெற இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு இறுதி போட்டியை நெருங்கி உள்ளது. இதுவரை நடந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதி போட்டிக்குள் தகுதி பெற்றது.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டியானது துபாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் இதுவரை ஒருமுறை கூட டி 20 உலகக்கோப்பை கோப்பையை வென்றதில்லை.
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 5 முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, இந்த முறை கோப்பையை கட்டாயம் வென்றாக வேண்டும் என்று களமிறங்கும். அதேபோல், 2019 ஒருநாள் உலகக்கோப்பை இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கோப்பையை தவறவிட்டது. இதனால் இந்தமுறை கட்டாயம் கோப்பை வெல்ல நியூசிலாந்து அணி தீவிரமாக முயற்சிக்கும்.
இதுவரை நடந்த டி 20 உலகக்கோப்பை தொடரின் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் ஆஸ்திரேலியா அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல பார்மில் உள்ளது.
ஆஸ்திரேலியா அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை டேவிட் வார்னர் தொடர்ந்து சிறப்பான தொடக்கத்தை தருகிறார். அவரை தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் மார்ஷ், மேத்யூ வேட், ஸ்டோனிஸ் நல்ல பார்மில் உள்ளனர்.
தொடர்ந்து, இந்த அணியில் பந்து வீச்சை பொறுத்தவரை இந்த தொடரில் ஆடம் சம்பா 12 விக்கெட்கள், ஸ்டார்க் 9 விக்கெட்கள், ஹாசல்வுட் 8 விக்கெட்களை கைப்பற்றி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர்.
அதேபோல், நியூசிலாந்து அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை மிட்சேல் 197 ரன்களுடனும், கப்தில் 180 ரன்களுடனும் சிறப்பான தொடக்கம் அளித்து வருகின்றனர். மிடில் வரிசை பேட்ஸ்மேன்களில் கேப்டன் வில்லியம்சன், ஜிம்மி நீசம் நல்ல பார்மில் உள்ளது அந்த அணிக்கு பலமாக உள்ளது. பந்து வீச்சில் போல்ட் (11 விக்கெட்), சோதி (9 விக்கெட்) ,டிம் சௌதி (8 விக்கெட்) கைப்பற்றி உள்ளனர்.
போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் அளித்த பேட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முந்தைய போட்டிகளின் நிலைமையை நினைத்து பார்க்க இது நேரம் இல்லை. நாங்கள் எங்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறோம், எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து கோப்பையை வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி கோப்பையை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.