IND Vs Pak: ”பாகிஸ்தானுக்கு காட்டணும்” கம்பீர் போட்டுக்கொடுத்த பிளான்.. இந்திய அணியின் ஃபயரான சம்பவம்
Asia Cup 2025 IND Vs Pak: ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் என்ற முடிவை, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் தான் எடுத்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

Asia Cup 2025 IND Vs Pak: ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணியினர் கைகுலுக்காதது பேசுபொருளாக மாறியுள்ளது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா:
ஆசியக் கோப்பையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இதனால் எந்தவித விறுவிறுப்பும் இன்றி போட்டி ஒருதலைபட்சமாக அமைந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதேநேரம், அந்நாட்டு வீரர்களுடன் மரியாதை நிமித்தமாக கைலுக்க மறுத்த, கேப்டன் சூர்யகுமார் யாதவின் செயல் பேசுபொருளாகியுள்ளது. கைகுலுக்குவதற்காக இந்திய அணி வீரர்களை நோக்கி வந்தபோதும், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சூர்யகுமார் யாதவ் விளக்கம்:
போட்டிக்கு பிறகான பரிசளிப்பு மற்றும் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய அணியின் முடிவு குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “பஹல்காம் தீவிரவாத தாக்குதலை மனதில் வைத்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு ஒரு தகவலை அனுப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக” கூறினார். அதேநேரம், இந்த ஆலோசனையை முன்னெடுத்தது அவர் இல்லை என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பீர் போட்ட பிளான்..
வெளியாகியுள்ள தகவல்களின்படி, பாகிஸ்தான் அணியினருடன் இந்திய வீரர்கள் கைகுலுக்கக் கூடாது என்ற முடிவை, தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் தான் முன்னெடுத்தாராம். அதோடு, போட்டியின் வார்த்தைகள் எதையும் பரிமாறிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினாராம். தீவிரவாத ஆதரவு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று எழுந்த கருத்து தொடர்பாக, சூர்யகுமார் உள்ளிட்டோர் கம்பீரை அணுகியுள்ளனர்.
அதற்கு, ”சமூக வலைதளங்களை தவிர்த்து அந்த கூச்சல்களை படிப்பதை நிறுத்துங்கள். இந்தியாவிற்காக விளையாடுவதே உங்கள் வேலை. பஹல்காமில் என்ன நடந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்களுடன் கைகுலுக்காதீர்கள், எதையும் பேசாதீர்கள். களத்திற்கு செல்லுங்கள், திறமையை காட்டுங்கள் மற்றும் இந்தியாவிற்காக போட்டியில் வெல்லுங்கள்” என கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
கம்பீர் சொன்னது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கம்பீர் பேசுகையில், “இது ஒரு நல்ல வெற்றி. ஆசியக் கோப்பை போட்டியில் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது. பஹல்காம் தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ஒற்றுமையைக் காட்டவும், அவர்கள் என்ன அனுபவித்தார்கள் என்பதையும் காட்ட நாங்கள் விரும்பியதால் இந்தப் போட்டி முக்கியமானது. மிக முக்கியமாக, வெற்றிகரமான ஆபரேஷன் சிந்தூருக்கு இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்திய நாட்டை பெருமைப்படுத்தவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்.
மீண்டும் இந்தியா Vs பாகிஸ்தான்
லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, சுவாரஸ்யமாக இல்லாமல் போனாலும், சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இரு அணிகளும் மோத வாய்ப்புள்ளது. அதுபோக, இரு அணிகளும் திறம்பட செயல்பட்டால், மூன்றவாது முறையாக இறுதிப்போட்டியிலும் இந்தியா - பாகிஸ்தான் மோத வாய்ப்புள்ளது.




















