Asia Cup 2023: திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடமா..? இன்று அறிவிக்கப்படும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி!
2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆசிய கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டநிலையில், இன்னும் இந்த போட்டிக்கான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.
இந்தநிலையில், 2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இதில், பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கருடன், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் கலந்து கொள்கிறார். இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், இதன் பின்னர் ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பெயர்கள் பிற்பகல் 1.30 மணிக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பைக்கான அணி தேர்வானது, வரும் உலகக் கோப்பையை மனதில் வைத்து செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. உலகக் கோப்பை 2023 போட்டியானது அக்டோபர் 5 ம் தேதி முதல் தொடங்கப்பட இருப்பதால், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும் என்ற பார்வை பிசிசிஐ மீது திரும்பியுள்ளது.
ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயரா..?
காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் ஆசிய கோப்பையில் இடம்பெறுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதி குறித்துதான் இன்னும் முழுமையாக எதுவும் தெரியவிலை. எனினும், இன்று அறிவிக்கப்படும் ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவார் என்றே நம்பப்படுகிறது. இது தவிர, ஓய்விலிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் இந்த அணியில் இடம் பெறலாம். மேலும், திலக் வர்மாவும் 17 பேர் கொண்ட அணியில் சர்ப்ரைஸ் பேக்கேஜாக இடம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பைக்கான இந்தியாவின் சாத்தியமான 17 பேர் கொண்ட அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரேத் சிராஜ், முகமது சிராஜ் பும்ரா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், இஷான் கிஷன் (ரிசர்வ் விக்கெட் கீப்பர்) மற்றும் திலக் வர்மா.
முழு போட்டி அட்டவணை:
தேதி | குரூப் லீக் போட்டிகள் | இடம் |
ஆகஸ்ட் - 30 | பாகிஸ்தான் vs நேபாளம் | முல்தான் (பாகிஸ்தான்) |
ஆகஸ்ட் - 31 | வங்கதேசம் vs இலங்கை | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -2 | பாகிஸ்தான் vs இந்தியா | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -3 | வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் | லாகூர் (பாகிஸ்தான்) |
செப்டம்பர் -4 | இந்தியா vs நேபாளம் | கண்டி (இலங்கை) |
செப்டம்பர் -5 | ஆப்கானிஸ்தான் vs இலங்கை | லாகூர் (பாகிஸ்தான்) |
சூப்பர் 4 சுற்றுகள் | ||
செப்டம்பர் -6 | A1 vs B2 | லாகூர் (பாகிஸ்தான்) |
செப்டம்பர் -9 | B1 vs B2 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -10 | A1 vs A2 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -12 | A2 vs B1 | கொழும்பு (இலங்கை) |
செப்டம்பர் -14 | A1 vs B2 | கொழும்பு (இலங்கை) |
இறுதிப்போட்டி | ||
செப்டம்பர் -17 | சூப்பர் 4 சுற்று - 1 vs 2 | கொழும்பு (இலங்கை) |