SL Vs BAN: சூப்பர் 4ல் இலங்கையிடம் முட்டி மோதும் வங்கதேசம்.. தனி ஆளாக மாஸ் காட்டிய சதீரா, 258 ரன்கள் இலக்கு
ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 258 ரன்களை இலங்கை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 257 ரன்களை குவித்துள்ளது.
ஆசியக்கோப்பை தொடர்:
ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் தோற்றால் அந்த அணி ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த அணி களமிறங்கியுள்ளது. மறுபுறம், சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு இது முதல் முதல் சூப்பர்-4 போட்டியாகும்.
இலங்கை பேட்டிங்:
பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களான நிசான்கா 40 ரன்களை சேர்த்த நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கருணரத்னே வெறும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே, மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், இன்றைய போட்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
நம்பிக்கை தந்த மெண்டிஸ் & சதீரா:
மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த குசால் மெண்டீஸ் மற்றும் சதீரா சமரவிக்ரமா கூட்டணி இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர். தொடர்ந்து, மெண்டீஸ் 50 ரன்களில் ஆட்டமிழந்தார், அவரை தொடர்ந்து வந்த அசலன்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனகா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். துனித் மற்றும் தீக்ஷனா ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
வங்கதேச அணிக்கு ரன்கள் இலக்கு:
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீரா, கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 72 பந்துகளில் 93 ரன்களை குவித்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை குவித்தது. வங்கதேச அணி சார்பில் ஹசன் மஹ்முத் மற்றும் தஷ்கின் அகமது ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஸ்லாம் தனது பங்கிற்கு 2 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடக்கத்தில் கட்டுக்கோப்பாக பந்துவீசிய வங்கதேச வீரர்கள், இறுதி கட்டத்தில் ரன்களை வாரிக் கொடுத்தனர். கடைசி 8 ஓவர்களில் மட்டும் வங்கதேச அணி 65 ரன்களை வாரி வழங்கியது. இதைதொடர்ந்து 258 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசம் எட்டுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். ஆசியக்கோப்பை 2023 தொடரில் நீடிக்க இந்த போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.