Asia Cup 2023: பாகிஸ்தானுக்கு எதிராக தோனியை விட ரோகித் செய்த காரியம்: கேப்டனாக தலயை முறியடிப்பாரா ஹிட்மேன்?
2018 ம் ஆண்டு இந்திய அணி கோப்பையை வென்றது. அதே ஆண்டில் ரோஹித் சர்மா கேப்டனாக ஒரு சிறப்பு சாதனையை படைத்தார். அது வேறு எந்த கேப்டனாலும் செய்ய முடியவில்லை.
ஆசிய கோப்பை 2023 போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 30 முதல் தொடங்குகிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி மீண்டும் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கவுள்ளது. முன்னதாக, 2022 மற்றும் 2018 ஆசிய கோப்பையில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் இறங்கியது. அதில், 2018 ம் ஆண்டு இந்திய அணி கோப்பையை வென்றது. அதே ஆண்டில் ரோஹித் சர்மா கேப்டனாக ஒரு சிறப்பு சாதனையை படைத்தார். அது வேறு எந்த கேப்டனாலும் செய்ய முடியவில்லை.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த ஒரே இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. 1984-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் பல வீரர்கள் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஆனால் கேப்டனாக யாராலும் சதம் அடிக்க முடியவில்லை. இந்த சதம் 2018 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்து அசத்தினார்.
2018 ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டி குரூப் ஸ்டேஜிலும், இரண்டாவது போட்டி சூப்பர்-4ல் நடந்தது. இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. அதே சமயம் சூப்பர்-4 ஸ்டேஜ் போட்டியில் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதில் கேப்டன் ரோகித் சர்மா முக்கிய பங்கு வகித்தார். 238 ரன்களை சேஸ் செய்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டத்தில் சதம் அடித்தனர்.
ரோகித் சர்மா 119 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 111* ரன்களும், ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 114 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 39. 3 ஓவரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2018 தோல்வியை சந்திக்காத ஒரே அணி இந்தியா:
ஆசியக் கோப்பை 2018 இல், இந்திய அணி இறுதி வரை எந்தப் போட்டியிலும் தோற்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் டையில் முடிந்தநிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தோனியின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித்..?
கேப்டனாக ஆசிய கோப்பையில் சிறந்த சாதனை படைத்த வீரர் யார் தெரியுமா? இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இணையாக யாரும் இல்லை.
ஆசிய கோப்பையில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் மகேந்திர சிங் தோனி. மகேந்திர சிங் தோனி 2008 ஆசிய கோப்பையில் 327 ரன்கள் எடுத்தார். 2018 ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மா 317 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன் ரணதுங்கா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இலங்கையின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா 1997 ஆசிய கோப்பையில் 272 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி 2010 ஆசிய கோப்பையில் 265 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 2004 ஆசிய கோப்பையில் சவுரவ் கங்குலி கேப்டனாக 244 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 2023 ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மா கேப்டனாக தோனியின் சாதனையை முறியடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.