Asia Cup 2023: இந்தியா மட்டும் வராவிட்டால் உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டோம் - எச்சரிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்!
ஆசிய கோப்பை தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி, இந்தியா மட்டும் பாகிஸ்தான் வராவிட்டால் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
6 அணிகள் பங்கேற்கும் 16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இருப்பினும், இரு நாடுகளுக்கிடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக சீராக இல்லை. இதன் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் விளையாட முடியாது. எனவே, அதற்கு பதிலா ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பொதுவான நாட்டில் நடத்தப்பட வேண்டும் என பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருதினம் முன்பு பஹ்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் ஒரு கூட்டத்தை கூட்டியது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அழைக்கப்பட்டிருந்தார். அந்த கூட்டத்தில் இது குறித்த முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில், இன்னும் முடிவடையவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மீண்டும் இந்த கூட்டம் மார்ச் மாதம் கூடும் எனவும் அப்போதுதான் எங்கு நடக்கும் என்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஆசியக் கோப்பை, 2023 உலகக் கோப்பை அல்லது 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் பாகிஸ்தான் கலந்துகொள்ளுமா என்பது குறித்த பிசிபி முடிவுகளும், மார்ச் மாத கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் தான் தீர்மானிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
எச்சரிக்கும் பாகிஸ்தான்:
ஆசிய கோப்பை தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி, இந்தியா வராவிட்டால் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, “ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது பல நாடுகள் பங்கேற்கும் தொடர். இந்திய அணிக்கு மிக உயரிய பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் உறுதியுடன் உள்ளது. எனவே, இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் நாட்டிற்கு அனுப்பமாட்டேன் என்று சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை.
பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி பெறாவிட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்காது. அடுத்த ஆசியக் கோப்பை தொடர்பாக கூட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து தெளிவான் முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது குறித்து நாங்கள் ஐசிசியிடம் தெரிவிப்போம்” என்றார்.
இந்தியா - பாகிஸ்தான்
2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பல வருடங்களாக தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான், கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து நடத்தத் திரும்பியுள்ளது, கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர்களும் (இந்தியாவைத் தவிர) கிரிக்கெட் விளையாட அந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உரசல்களின் விளைவாக பல ஆண்டுகளாக பாகிஸ்தான்-இந்தியா உறவுகள் மோசமடைந்துள்ளன. 2012-13ல் பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஒருநாள் தொடரில் இருந்து, அதன் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகள் ஐசிசி மற்றும் ஏசிசி நிகழ்வுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்திய ஆண்கள் அணி 2008 முதல் பாகிஸ்தானில் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்றாலும், பாகிஸ்தான் கடைசியாக 2016 டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு வந்தது.