Asia Cup 2023 Date: ஹைப்ரிட் மாடலில் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர்.. 13 போட்டிகள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கும் என ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெறும் என, ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 13 போட்டிகள் இந்த தொடரில் நடைபெற உள்ளன. ஹைப்ரிட் மாடலில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பை தொடரில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாலிபையர் சுற்று:
ஒருநாள் போட்டியாக நடைபெற உள்ள இந்த தொடரில் பங்கேற்கும் 6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து மோத உள்ளன. அதில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 17ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மோத உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்:
நடப்பாண்டு நடைபெற உள்ள ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் முழுமையாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால் கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கோ, நமது அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை. அந்த வகையில் தான், நடப்பாண்டிற்கான ஆசியக்கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவித்த உடனேயே, இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லாது என பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் சொன்ன ஆலோசனை:
இதையடுத்து, எந்தவித பிரச்னையும் இன்றி ஆசியகோப்பை தொடரை நடத்தி முடிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்திற்கு பரிந்துரை ஒன்றை வழங்கியது. அதன்படி, இந்தியாவை தவிர மற்ற அணிகள் விளையாடும் அனைத்து போட்டிகளும், பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்படும். ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அதுவும் இலங்கயிலேயே நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்திற்கு பரிந்துரைத்தது. இதையடுத்து, 4 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும், 9 போட்டிகளை இலங்கையில் நடத்தவும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, ஆசிய கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது..
பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு ஏன்?
2009-ஆம் ஆண்டில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த சர்வதேச போட்டிகளும் நடத்தப்படவில்லை. பாகிஸ்தான் அணி மீதான பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. இதன் காரணமாக அண்மையில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அண்மையில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றன. பாகிஸ்தான் மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்த அணிகள் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தின. ஆனாலும் இந்திய அணி மட்டும் தற்போது வரை பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்து வருகிறது.