உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024.. "மொத்த அணியையும் சரியா வழி நடத்தியது அந்த இரண்டு பேர் தான்" - அம்பத்தி ராயுடு!
ஜூனியர் வீரர்களையும் மொத்த அணியையும் சரியான வழியில் வழி நடத்திய ஹர்பஜன் மற்றும் யுவராஜ் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024:
இங்கிலாந்தில் நடைபெற்ற 2024 உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையை வென்றது. முன்னதாக, இங்கிலாந்தில் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் 2024 தொடரின் முதல் சீசன் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ், தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் இடம் பெற்று விளையாடின.
இதில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையிலான உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியானது, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்தியா சாம்பியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி வென்று சாதனை படைத்தது.
ஹர்பஜன் மற்றும் யுவராஜ் பாராட்டுக்குரியவர்கள்:
இந்நிலையில் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் தான் என்று ஆட்ட நாயகன் விருது பெற்ற அம்பத்தி ராயுடு பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்த தொடரின் தரம் சிறப்பாக இருந்தது. இங்கே அட்ஜஸ்ட் செய்து விளையாடுவதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஆனால் அதை செய்து வென்றதில் மகிழ்ச்சி. ஜூனியர் வீரர்களையும் மொத்த அணியையும் சரியான வழியில் வழி நடத்திய ஹர்பஜன் மற்றும் யுவராஜ் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
களத்தில் மிகவும் அதிரடியாக செயல்படாமல் அனைத்தையும் எளிதாக பின்பற்றி விளையாடுமாறு யுவராஜ் என்னிடம் சொன்னார். நீண்ட நாட்கள் கழித்து கிரிக்கெட்டில் விளையாடியது கடினமாக இருந்தது. இத்தொடரில் ஆரம்பத்தில் சில போட்டிகளில் சுமாராக விளையாடிய பின்பும் வெற்றி பெறுவது எளிதாக இல்லை. இதற்கு யுவராஜ் சிங் மற்றும் அணி நிர்வாகம் முக்கிய காரணம். பைனலில் 2 அணிகளுக்கும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.