T20 World Cup: டி20 உலகக் கோப்பை நாயகன்.. யுவராஜ் சிங்கை கவுரவித்த ஐசிசி!
டி20 உலகக் கோப்பை தொடர் இன்னும் 36 நாட்களில் நடைபெற உள்ளது.
2024 டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை 2024:
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 36 நாட்கள் மட்டுமே இருக்கிறது. அந்தவகையில் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடர் இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலபடுத்த வேண்டும் என்ற முனைப்பில் தான் இந்த போட்டிகளை அந்த நாட்டில் நடத்த ஐசிசி முடிவு செய்து இருக்கிறது.
இதனிடையே டி20 உலகக் கோப்பை தொடரின் தூதராக யார் அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. இச்சூழலில் ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப் பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட்டை தூதராக அறிவித்தது ஐசிசி.இவர் 8 முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். அதேபோல், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கும் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் மற்றொரு தூதராக அறிவிக்கப்பட்டார்.
தூதராக அறிவிக்கப்பட்ட யுவராஜ் சிங்:
இந்நிலையில் தான் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் நாயகனாக திகழ்ந்த யுவராஜ் சிங்கை டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் தூதராக அறிவித்துள்ளது ஐசிசி.
முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
பெருமையாக இருக்கிறது:
டி20 உலகக் கோப்பை தொடரின் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து யுவராஜ் சிங் பேசுகையில், "டி20 உலகக்கோப்பை ஆடியதில் இருந்து எனக்கு சிறந்த நினைவுகள் கிடைத்தன. அந்த நினைவுகளில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்ததும் இருக்கும். இந்த உலகக்கோப்பை தொடரின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் இது மிகவும் முக்கியமானது”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி இந்த ஆண்டின் மிகப் பெரிய போட்டியாக இருக்கும். இந்த தொடரின் ஒரு பகுதியாக இருந்து உலகின் சிறந்த வீரர்கள் புதிய மைதானத்தில் பங்கேற்பதை காண்பது எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன்" என யுவராஜ் சிங் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: Jasprit Bumrah: ”எனது பயணத்தில் இணையுங்கள்” - ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பும்ரா!
மேலும் படிக்க: Shubman Gill: கிடைச்சா களத்துல இருப்பேன்; இல்லைன்னா..? டி20 உலகக் கோப்பை தேர்வு குறித்து சுப்மன் கில்