2003 WC IND vs AUS: 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடந்தது என்ன? இந்திய ரசிகர்கள் மனதின் ஆறாத வடு!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 20 ஆண்டுகள் கணக்கை இந்தியா தீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடக்கிறது. கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கிய இந்த பிரம்மாண்ட திருவிழாவின் முடிவில் மகுடம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
ஆறாத வடுவாக நிற்கும் 2003:
இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றது என்றவுடன் நீண்ட ஆண்டுகளாக கிரிக்கெட் பார்க்கும் பலருக்கும், குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் நினைவுக்கு வருவது 2003ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியே. அந்த போட்டியில் தோற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்டது. அன்றைய தினம் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சோகம் அடைந்தனர்.
அன்று நடந்ததை ஒரு முறை திரும்பிப் பார்ப்போம். 2003ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. முழுவதும் இளம் ரத்தங்களுடன் கங்குலி தலைமையில் சச்சினின் அனுபவத்துடன் அந்த தொடரில் களமிறங்கியது இந்தியா. லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மட்டும் தோல்வியைத் தழுவிய இந்தியா தன்னுடைய அபாரமாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதே இறுதிப்போட்டி:
ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் 2003ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி இறுதிப்போட்டி நடைபெற்றது. இன்று இருப்பது போல அன்றைய ஆஸ்திரேலிய அணி கிடையாது. உலக கிரிக்கெட் அரங்கிலே மிகவும் அசுர பலம் பொருந்திய அணியாக அன்றைய ஆஸ்திரேலியா இருந்தது. ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், ஹைடன், மார்டின், சைமண்ட்ஸ், பிரட்லீ, மெக்ராத் என அனைவருமே அசாத்தியமாக ஆடக்கூடியவர்கள்.
இந்திய அணியிலும் சச்சின், சேவாக், கங்குலி, டிராவிட், ஹர்பஜன், ஜாகிர்கான், ஸ்ரீநாத், நெக்ரா என்று திறமைசாலிகளாக களமிறங்கினர். இந்திய அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது, ஆட்டத்தை கில்கிறிஸ்டும், ஹைடனும் துரிதமாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக, ஹைடன் சற்று நிதானம் காட்ட கில்கிறிஸ்ட் சரவெடியாக வெடித்தார்.
பொளந்து கட்டிய பாண்டிங்:
கில்கிறிஸ்ட் பவுண்டரி, சிக்ஸர் என விளாச அவர் 48 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு ரிக்கி பாண்டிங் களம் புகுந்தார். நிதானமாக ஆடிய ஹைடன் 54 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து பாண்டிங்குடன் மார்டின் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.
குறிப்பாக, பாண்டிங் சிக்ஸர் மழையாக பொழிந்தார். 125 ரன்களில் சேர்ந்த இந்த கூட்டணி அதிரடியாகவே ஆடியதால் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் விழிபிதுங்கினர். கங்குலியும் ஜாகிர்கான், ஸ்ரீநாத், நெஹ்ரா, ஹர்பஜன், சேவாக், சச்சின், தினேஷ் மோங்கியா, யுவராஜ் என 8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தார். ஆனால், எந்த பயனும் இல்லை. குறிப்பாக, அந்த தொடர் முழுக்க சிறப்பாக வீசிய ஜாகிர் கான், ஸ்ரீநாத் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.
360 ரன்கள் டார்கெட்:
பாண்டிங்கின் அதிரடிக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த டேனியல் மார்டினும் அதிரடியில் அசத்த 200 ரன்களை கடந்து 300 ரன்களை ஆஸ்திரேலியா கடந்தது. அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் சதம் விளாசினார். சதத்தை கடந்தும் அவரது அதிரடி நிற்கவில்லை. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்ற 360 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் 360 ரன்கள் என்பது எல்லாம் சர்வசாதாரணமான இலக்கு ஆகும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஒருநாள் கிரிக்கெட்டில் பவர்ப்ளே இல்லாத அந்த காலகட்டத்தில் 360 ரன்கள் என்பது எல்லாம் அசாதாரணமான இலக்கு ஆகும். அதுவும் மெக்ராத், பிரட்லீ, பிராட் ஹாக் போன்ற பந்துவீச்சாளர்களை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அசாத்தியமான ஒன்றாகவே ரசிகர்களால் கருதப்பட்டது.
தனி ஆளாக போராடிய சேவாக்:
இருப்பினும் நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சச்சின் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்க, அதே ஓவரில் மெக்ராத் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் கங்குலி சேவாக்குடன் ஜோடி சேர்ந்தார். அவர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் பிரட்லீ பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த முகமது கைப் டக் அவுட்டாக 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிசப்தமானார்கள்.
அடுத்து அதிரடி வீரர் சேவாக்குடன் டிராவிட் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடினால் மட்டுமே மாற்றம் நிகழும் என்று எண்ணிய சேவாக் ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுக்கத் தொடங்கினார். ஆனாலும், இலக்கு பெரியது என்பதால் இந்தியாவின் ஸ்கோர் ஏறினாலும் தேவைப்படும் ரன்களும் அதிகமாகவே இருந்தது. பவுண்டரி, சிக்ஸர் என யார் வீசினாலும் வெளுத்து வாங்கிய சேவாக் 82 ரன்னில் அவுட்டானார். அவர் 81 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்திருந்தார். சேவாக் அவுட்டானபோது இந்தியா 23.5 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்தது. சேவாக் இருந்தவரை இருந்த நம்பிக்கையும் அவர் ஆட்டமிழந்தபிறகு போய்விட்டது என்றே சொல்லலாம்.
பறிபோன கோப்பை:
அடுத்து டிராவிட் – யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். ஆனால், யுவராஜ் அதிரடியான வீரர் என்றாலும் அவருக்கு அதுதான் முதல் உலகக்கோப்பை ஆகும். இறுதிப்போட்டி பதட்டமும் ஒட்டிக்கொள்ள யுவராஜ் சிங்கால் அதிரடியாக ஆட முடியவில்லை. ராகுல் டிராவிட் 47 ரன்களில் அவுட்டாக, யுவராஜ் சில் 24 ரன்களில் நடையை கட்டினார். யுவராஜ்சிங் அவுட்டான பிறகு இந்தியாவின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
கடைசியில் ஹர்பஜன்சிங் 7 ரன்கள், ஜாகிர்கான் 4 ரன்கள், ஸ்ரீநாத் 1 ரன் என அடுத்தடுத்து அவுட்டாக இந்தியா 39.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு அவுட்டானது. இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையை பறிகொடுத்தது. அந்த தோல்வி இந்திய ரசிகர்களின் மனதில் ஆறாத வடுவாகவே இருந்தது என்று சொல்லலாம்.
20 ஆண்டுகள் கணக்கு தீர்க்கப்படுமா?
அன்றைய காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவ்வளவு பெரிய இமாலய இலக்கை நோக்கி ஆடி 40 ஓவர்களுக்குள் 234 ரன்கள் எடுத்தது என்பதே மிகப்பெரிய விஷயம் ஆகும். இதனால், கோப்பையை பறிகொடுத்தாலும் நாடு திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பே அளிக்கப்பட்டது.
அதன்பிறகு, 2011ம் ஆண்டு பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை இந்தியா அரையிறுதியில் வீழ்த்தியிருந்தாலும், 20 ஆண்டுகள் கழித்து அதே ஆஸ்திரேலிய அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்த இந்திய அணிக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றுவது மட்டுமின்றி 20 ஆண்டுகால பழைய கணக்கை முடிக்க வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகின்றனர்.