Praggnanandhaa: பட்ஜெட் உரையில் பிரக்ஞானந்தாவை புகழ்ந்த நிர்மலா சீதாராமன்!
Praggnanandhaa: செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்றைய தினம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 10 ஆண்டுகள் ஆகும் சூழலில், அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும்.
பிரக்ஞானந்தாவுக்கு புகழராம்:
இந்நிலையில் இடக்கால பட்ஜெட்டை தாக்கம் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதனிடையே செஸ் கிராண்ட் மாஸ்டரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு புகழராம் சூட்டினார்.
பின்னர் பேசிய அவர், “ விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் புதிய உயரங்களுக்குச் செல்வதைக் கண்டு நம்முடைய நாடு பெருமைகொள்கிறது. செஸ் விளையாட்டின் முதல் நிலை வீரரான பிரக்ஞானந்தா, 2023 ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு கடும் சவால் அளித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 20 ஆக மட்டும் தான் இருந்தது. ஆனால், தற்போது கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்து நிற்கிறது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அஜர்பைஜானின் பாகு நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் டை பிரேக்கரில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. எனினும், இத்தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரக்ஞானந்தா இந்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்றார்.
இவரின் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடியது. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சூழலில் தான் இன்றைய பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செஸ் கிராண்ட் மாஸ்டரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Khelo India Games: கேலோ இந்தியா... இரண்டாவது இடத்தை தட்டித்தூக்கிய தமிழ்நாடு! எத்தனை பதக்கங்கள் தெரியுமா?