Nethra Kumanan | பரதநாட்டியம் To பாய்மரப்படகு : சென்னை தமிழச்சி நேத்ரா குமணனின் பயணம் !
டோக்கியோ ஒலிம்பிக் பாய்மரப்படகு போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன் பங்கேற்க உள்ளார்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப நமக்கு பிடித்த விஷயம் என்னவாக இருந்தாலும் அதை நாம் செய்ய தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருக்க வேண்டும். அந்தவகையில் ஒரு பெண், தன்னுடைய விடா முயற்சியால் பல தடைகளை தாண்டி தன்னுடைய கனவை நினைவாக்கி வருகிறார். யார் அவர்? அவரின் கனவு என்ன?
பாய்மரப்படகு ஆர்வம்:
1996ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நேத்ரா குமணன். சென்னையில் பிறந்து வளர்ந்ததால் பள்ளி விடுமுறையின் போது பல சம்மர் கேம்ப் வகுப்புகளுக்கு செல்ல அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஒரு முறை நடன வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது பரதநாட்டியம் மீது ஆர்வம் கொண்டு அதை முறையாக கற்க ஆரம்பித்துள்ளார். பின்பு தன்னுடைய 12ஆவது வயதில் பள்ளி விடுமுறையின் போது அவருடைய தாய் ஒரு பாய்மரப்படகு சம்மர் கேம்ப் வகுப்பு தொடர்பான செய்தியை பார்த்துள்ளார். அந்தச் செய்திதான் இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்ட விஷயமாக அமைந்துள்ளது.
பொதுவாக பலர் பாய்மரப்படகு விளையாட்டை ஒரு பொழுதுபோக்காக கருதுவார்கள். ஆனால் நேத்ராவிற்கு இது ஒரு நல்ல விளையாட்டாக தெரிய தொடங்கியுள்ளது. அவர் இதில் அதிக ஆர்வம் பெற தொடங்கினார். 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு பாய்மரப்படகு வீரங்கனையாக உருவெடுத்தார். இதன்பின்னர் தனது தந்தையிடம் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பயிற்சிபெற வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் நிதி திரட்டி இவரை ஸ்பெயின் நாட்டிற்கு பயிற்சிக்கு அனுப்பியுள்ளார்.
ஆசிய பாய்மரப்படகு போட்டிகள்:
தன்னுடைய சிறுவயதில் கற்றுக் கொண்ட பரதநாட்டியத்தின் மூலம் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாய்மரப்படகு விளையாட்டிலும் செயல்படுத்தினார். அதன் விளைவாக 2014-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். அதில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் பட்டம் வென்றார். பின்னர் 2014 ஆசிய போட்டிகளில் இந்தியா சார்பில் பாய்மரப்படகு போட்டியில் பங்கேற்றார். அதில் 7-ஆவது இடத்தை பிடித்தார்.
பயிற்சிக்காக அடிக்கடி ஐரோப்பா செல்ல வேண்டிய சூழல் இருந்ததால் தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் நிறுத்தியுள்ளார். அதன்பின்னர் திறந்த வழி பள்ளியில் பயின்று தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இந்த தடைகள் எதுவும் அவருடைய விளையாட்டிற்கு தடையாக இருக்கவில்லை. 2018-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் லேசர் ரேடியல் பிரிவு பாய்மரப்படகு போட்டியில் இந்தியா சார்பில் நேத்ரா குமணன் பங்கேற்றார். அதில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட அவர் மிகவும் குறைவான இடைவெளியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். நான்காவது இடத்தை பிடித்து கடந்த ஆசிய போட்டியைவிட இம்முறை நல்ல முன்னேற்றம் கண்டார்.
உலகக் கோப்பை பாய்மரப்படகு:
2014-ஆம் ஆண்டு ஆசிய போட்டிக்கு பிறகு 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று முயன்றுள்ளார். எனினும் அது அவருக்கு சாத்தியமாகவில்லை. இந்தச் சூழலில் 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற வேண்டும் என்று தீவிரமாக உழைத்துள்ளார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாய்மரப்படகு உலகக் கோப்பை தொடரில் லேசர் ரேடியல் பிரிவில் இவர் பங்கேற்றார். அதில் சிறப்பாக செய்லிங் செய்த இவர் வெண்கலப்பதக்கம் வென்றார். உலகக் கோப்பை பாய்மரப்படகு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் தகுதி:
இதன்பின்னர் அதே ஆண்டில் நடக்க இருந்த ஆசிய சாம்பியன்ஷிப் பாய்மரப்படகு போட்டிக்கு தயாராகி வந்தார். எனினும் கொரோனா பாதிப்பு காரணமாக அந்தப் போட்டி இந்தாண்டு நடைபெற்றது. அதில் சிறப்பாக செயல்பட்ட இவர் முதலிடம் பிடித்தார். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நேரடியாக பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் 10 பேர் பாய்மரப்படகு போட்டியில் பங்கேற்க உள்ளனர். அவர்களில் நேத்ரா குமணன் மட்டும்தான் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றவர்கள் அனைவரும் ஒலிம்பிக் தகுதி இடங்களை(quota) பெற்று தகுதி அடைந்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு குறைவு என்றாலும், அவர் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதே குறிப்பிடும்படியான விஷயமாக உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரிலிருந்து நல்ல முயற்சியை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்வதேச அளவில் இவர் லேசர் ரேடியல் பிரிவு தரவரிசையில் 71-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சர்ச்சைகளும்... சாதனைகளும்... தடைகளைத் தாண்டி வெற்றிப்பெற்ற தடகள மங்கை டூட்டி சந்த்!